சேலம் : சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில், விதிமுறை மீறி எளிதில் தீ பற்றக்கூடிய, 'டீ', ஹோட்டல் உள்ளிட்ட கடைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்ணை கட்டி கொண்டிருக்கின்றனர். பல்வேறு தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாநகராட்சிக்கு சொந்தமாக, 500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. மேலும், நாளங்காடி, வாரச்சந்தை, திருமண மண்டபம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் பெறப்பட்டு வருகிறது.மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளிட்டவற்றை ஏலம் விடும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏராளமான அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ஏலதாரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறும்பட்சத்தில், அவர்களின் ஏல உரிமையை ரத்து செய்யும் உரிமம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.ஆனால், மாநகராட்சியில் ஏலதாரர்கள், நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர். சைக்கிள் ஸ்டாண்டு, மார்க்கெட்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல், வணிக வளாக கடைகளை உள்வாடகைக்கு விடுதல், மாநகராட்சி கடைகளை, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதுப்பித்து கொள்ளுதல் என்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் புது பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமாக, 56 கடைகள் உள்ளது. பெரும்பாலோனோர் வருவாய் நோக்கத்தில் ஹோட்டல், டீ கடை ஆகியவற்றை வைத்துள்ளனர்.இரண்டு ஆண்டுக்கு முன், ஆவின் பாலகம் வைப்பதற்கு, 20 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலோனோர் டீ கடைகளை வைத்துள்ளனர்.கடை, ஏல நன்னடத்தை விதிமுறைப்படி, மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில், எளிதில் தீப்பற்றக்கூடிய காஸ், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது. ஆனால், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாகம் ஆகிய இடங்களில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் டீ கடைகள் வைக்கப்பட்டுள்ளது.நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்ற தவறிய, ஏலதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டும், வாய் மூடியும் மவுனம் காத்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம், கடந்த வாரம் வரை தொடர்ந்து வருகிறது.சேலம் நான்கு ரோட்டில் கடந்த ஆண்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆறு கடைகள் ஏலம் விடப்பட்டது. குறைந்தப்பட்சம், 8,000 ரூபாயில் இருந்து, 16 ஆயிரம் ரூபாய் வரைக்கு கடை ஏலம் போனது. மாநகராட்சி வரலாற்றில், அதிக வருவாய்க்கு கடை ஏலத்துக்கு விடப்பட்டதால், அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நான்கு ரோடு வணிக வளாகத்தில், ஆறாவது கடையை ராஜேந்திரன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். சமீபத்தில் இந்த கடை திறக்கப்பட்டது. வெளிப்படையாக எளிதில் தீ பற்றக்கூடிய, 'டீ' கடை வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்ற தவறும் ஏலதாரர்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பல்வேறு தரப்பினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.