/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்மண் கடத்தி விற்பனை வருவாய்த்துறை அலட்சியம்
/
செம்மண் கடத்தி விற்பனை வருவாய்த்துறை அலட்சியம்
ADDED : செப் 13, 2011 02:07 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்துவதாக அனுமதி வாங்கி, ஏரியில் இருந்து செம்மண்ணை அள்ளி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.ஆத்தூர் அருகே துலுக்கனூர் பஞ்சாயத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 105 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. அதிலுள்ள செம்மண், கிராவல் மண்ணை, சேலம்-உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை பணிக்கு பயன்படுத்திக் கொள்ள மாவட்ட கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.மேலும், விவசாய தோட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள குறிப்பிட்ட யூனிட் அளவு செம்மண் வெட்டி எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்து கொண்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறையினர் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்த அனுமதியை பயன்படுத்தி, பொக்லைன் இயந்திரத்தை வைத்து இரவு பகலாக ஏரியில் உள்ள செம்மண்ணை அள்ளி, டிப்பர் லாரிகளில் ஏற்றிச் சென்று விவசாய தோட்டத்தில் கொட்டி வைத்துக் கொள்ளவதாகவும், அந்த செம்மண்ணை புதிதாக வீட்டுமனை பிரிக்கும் இடத்தை சமன் படுத்தவும், சாலை அமைக்கவும் மற்றும் செங்கல் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.