/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
/
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
ADDED : செப் 13, 2011 02:08 AM
சேலம்: சேலத்தில், பச்சிளங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த, நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன், போலீஸார் கைது செய்தனர்.சேலத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் 'சிக்னல் பாயின்ட்'டுகளில் சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழையில் பச்சிளங் குழந்தைகளை வைத்து பெண்கள் பிச்சை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.மாநகர போலீஸ் துணை கமிஷனர் சத்யப்ரியா தலைமையில், சிறார் சீர்த்திருத்த பிரிவு போலீஸ் எஸ்.ஐ., கற்பகம், அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ரமணா, பிரேமா, ஒய்.டபுள்யு.சி.ஏ., இயக்குனர் ரூபி தியாகராஜன், 'சைல்டு லைன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், குழுந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், புது பஸ் ஸ்டாண்ட், அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்களுடன், தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீஸார், கைக்குழந்தைகளை மடியில் கட்டிக் கொண்டு பெண்கள், சாலை சந்திப்பு, மெயின் ரோடு, 'சிக்னல் பாயின்ட்'டுகளில் பிச்சை எடுத்து கொண்டிருந்த, விஜயா(30), நாகம்மாள்(25), உமாதேவி(26), அஞ்னம்மாள்(26) ஆகிய நான்கு பெண்களை கைது செய்தனர்.
அதே போல், சாலையில் போவோர், வருவோரிடம் பிச்சை எடுத்து கொண்டு இருந்த, ஆண்டவன்(16) என்ற சிறுவனையும் போலீஸார் பிடித்தனர்.போலீஸ் விசாரணையில், குடும்ப வறுமை காரணமாக, குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதாக, அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.அந்த பெண்களை யாராவது கடத்தி வந்து, பிச்சை எடுக்க வற்புறுத்தி வருகின்றனரா? அவர்கள் பின்னணியில் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் இயங்குகிறதா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து, சேலம் மாநகர பகுதியில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், சிறுவர், சிறுமிகளை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து போலீஸார் தேடி வருகின்றனர்.பிச்சை எடுப்பவர்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு கைத்தொழில் கற்று கொடுத்து வரும் நிலையில், பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு, பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.