/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உள்ளாட்சி தேர்தலில் சீட் மறுப்பு அ.தி.மு.க., மகளிர் அணி து.செயலாளர் ராஜினாமா
/
உள்ளாட்சி தேர்தலில் சீட் மறுப்பு அ.தி.மு.க., மகளிர் அணி து.செயலாளர் ராஜினாமா
உள்ளாட்சி தேர்தலில் சீட் மறுப்பு அ.தி.மு.க., மகளிர் அணி து.செயலாளர் ராஜினாமா
உள்ளாட்சி தேர்தலில் சீட் மறுப்பு அ.தி.மு.க., மகளிர் அணி து.செயலாளர் ராஜினாமா
ADDED : செப் 25, 2011 01:15 AM
சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அ.தி.மு.க., மாநகர், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ராஜேஸ்வரி, கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.
சேலம் மாநகராட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலால், கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சி தலைமைக்கு பல்வேறு புகார்களை அனுப்பி வருகின்றனர். சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களம் இறங்க திட்டமிட்டுள்ளனர். சேலம் மாநகர், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருப்பவர் ராஜேஸ்வரி. மாநகராட்சி எட்டாவது வார்டில் வசித்து வருகிறார். கவுன்சிலர் சீட் கேட்டு விருப்ப மனு வழங்கியிருந்தார். ஆனால், பாமா கண்ணன் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது.
எனவே, அதிருப்தி அடைந்த ராஜேஸ்வரி, நேற்று நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரிடம், 'கட்சி பதவியில் இருந்து விலகுவதாக' கூறி ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். அமைச்சர், 'கட்சி தலைமையிடம் வழங்கப்படும்' என,தெரிவித்துள்ளார். நேற்று காலை, தன் ராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமைக்கு அனுப்பினார்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேலம் மாநகராட்சி, 8வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, பாமா கண்ணன் என்பவரை மாவட்ட செயலாளர் பரிந்துரை செய்து, அவரை தேர்ந்தெடுத்துள்ளார். பாமா கண்ணன், தே.மு.தி.க., வில் இருந்து நமது கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. அவர், 8வது வார்டில் அறிமுகம் ஆகாதவர். உள்ளாட்சி தேர்தலுக்கு அறிமுகம் மிக முக்கியம். நான் மாவட்ட செயலாளரிடம் எவ்வளவோ போராடினேன். அதற்கு, மாவட்ட செயலாளர், 'என்னை வெளியே போ ! இது என் விருப்பம்' என்று கூறினார். மாவட்ட செயலாளர், முதல்வருக்கு துரோகம் செய்கிறார், என்னால் இதை தாங்கமுடியவில்லை. அதனால் நான், 8வது வார்டு நலனுக்காகவும், இந்த ஆட்சியில் நல்லது நடக்கிறது என்பதாலும், மாவட்ட செயலாளரின் போக்கால், 8வது வார்டில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதால், நான் சுயேட்சையாக உள்ளாட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று, உங்கள்(ஜெயலலிதா) காலடியில் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். எனவே, நமது கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு கறியுள்ளார். மகளிர் அணி துணை செயலாளரின் ராஜினாமா விவகாரத்தால், மாநகர அ.தி.மு.க., வில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.