/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
/
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ADDED : செப் 26, 2011 11:52 PM
சேலம்: சேலம் மாநகராட்சியில் கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில், மாஜி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆதரவாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.
அவர் கொடுத்த பட்டியலை, வீரபாண்டி ஆறுமுகம் புறக்கணித்தது தெரியவந்துள்ளது. சேலம் மாநகராட்சியில், கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே பதவியில் இருந்த, 16 வேட்பாளர்களும், புதியதாக 44 வேட்பாளர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பி, 1,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். சேலம் கலைஞர் மாளிகையில் நடந்த நேர்காணலின் போது, வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார். அதனால், தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்ற டாக்டர் சூடாமணி, மாரியப்பன் ஆகியோர் நேர்காணலை புறக்கணித்தனர். மாநகர செயலாளர் கலையமுதனும் பெயரளவுக்கே அமரவைக்கப்பட்டார். மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், மாநகர அவைத்தலைவர் சுபாஷ், வீரபாண்டி ராஜா ஆகியோர், வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தினர். ராஜேந்திரன் ஆதரவாளர்களான, சூடாமணி, மாரியப்பன் வெளியேறிய நிலையில், சுபாஷ் மட்டும் அங்கு அமர்ந்திருந்தது, அவர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. துணை மேயர் பதவிக்காக, வீரபாண்டி ஆறுமுகம் தரப்பிடம், அவர் சரணடைந்து விட்டார் என்றும் 49வது வார்டு கவுன்சிலராக போட்டியிட, மண்டலக்குழு தலைவர் மோகன் விரும்பியபோதும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், அந்த வார்டில் சுபாஷை களம் இறக்கியுள்ளதால், அப்பகுதி நிர்வாகிகள் விரக்தியடைந்துள்ளனர்.
நேர்காணலின் போது கொடுக்கப்பட்ட பட்டியல், அதன்பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ராஜேந்திரன் சார்பில், 14 பேர் கொண்ட பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில், சுபாஷுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்களான, துணை மேயர் பன்னீர்செல்வம், மண்டல தலைவர்கள் நடேசன், மோகன், வெங்கடேசன், குட்டி என்ற தமிழரசன், கே.எஸ்.பழனிசாமி, தளபதி நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் மயில்வேலு, அவருடைய மனைவி உள்ளிட்டோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகள், மூத்த மகன் ராஜா, இளைய மகன் பிரபு, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய அழகாபுரம் முரளி மனைவி புவனேஸ்வரிக்கு, 4வது வார்டிலும், பா.ம.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த விஷ்ணுபார்த்திபனுக்கு 6வது வார்டிலும், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அருணாசுந்தருக்கு, 7வது வார்டிலும், நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கில் கைதான ஆட்டோ மாணிக்கத்துக்கு, 9வது வார்டிலும், வக்கீல் தெய்வலிங்கத்துக்கு 10வது வார்டிலும், 26வது வார்டை பொறுத்தமட்டில், கலையமுதன் மருமகள் சொர்ணலதாவுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேயர் வேட்பாளராக அவரை அறிவித்ததால், அந்த வார்டில் மாஜி மந்திரியின் மகள் மகேஸ்வரியின் ஆதரவாளர் ஜெயமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், 30வது வார்டில் நில அபகரிப்பில் சிக்கிய ஜிம் ராமுவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல தலைவர் அசோகன், மகளிர் அணி தேவி, தமிழ்செல்வி, உமையாபானு, ஆருன்னிஷா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வார்டு கவுன்சிலர் தேர்வில், ராஜேந்திரன் ஆதரவாளர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், 60 வார்டிலும் சுயேச்சையாக போட்டியிடும் முடிவில் அவர்கள் உள்ளனர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராகவும், அதே வேளையில் கருணாநிதி, ஸ்டாலின் சாதனைகளை கூறி, மக்களிடையே ஓட்டு கேட்கவும் எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.