/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம்
/
சேலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம்
ADDED : ஜூன் 05, 2025 02:28 AM
சேலம், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை யில், தமிழக அரசின், 'இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் திட்டம் 48', கடந்த, 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது. அங்கு தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த காமராஜ் மகன் கலைச்செல்வன், 29, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். அவர் மீது, மருத்துவர்களை ஏமாற்றி பணம் பறித்ததாக எழுந்த புகாரால், கடந்த, 29ல் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து, இன்னுயிர் காப்போம் திட்ட பொறுப்பு அதிகாரி ரவி கூறுகையில், ''திருவண்ணாமலையை சேர்ந்த, மருத்துவர் செந்தில்குமார் புகாரை அடுத்து, கலைச்செல்வன் மீது நிறைய புகார்கள் எழுந்தன. கடந்த, 19ல் இருந்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக, அவரிடம் கைப்பட கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு, 29 முதல் அறவே நிறுத்திவிட்டோம்,'' என்றார்.
மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது:
'நர்சிங்' படித்த கலைச்செல்வன், மருத்துவர்களுடன் முகநுாலில் பேசி பழகிய பின், அடுத்த கட்டமாக வாட்ஸாப் கால் மூலம், தொடர்பை வளர்த்து, நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின் அவர்களது பலவீனத்தை தெரிந்து, அதற்கேற்ப பழகி, பணிய வைத்து பணம் பறிக்கும் வேலையை செய்து வந்தார். அவர் மருத்துவர் என்றும், முதுகலை படித்து வருகிறேன் என்றும் மாறி மாறி அறிமுகம் செய்து, பலரிடம் பண மோசடி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினர்.