/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்காமல் அலட்சியம்
/
மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்காமல் அலட்சியம்
ADDED : ஜூலை 28, 2011 02:50 AM
பனமரத்துப்பட்டி:பாசன கிணறுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்காத
விவசாயிகளிடம் இருந்து, 9 சதவீதம் வட்டியுடன், அரசு வழங்கிய மானியத் தொகை
வசூலிக்கப்படும் என, பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகம்
செய்யப்பட்டுள்ளது.நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், பாசன கிணறுகளில்
மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க, விவசாயிகளுக்கு அரசு அறிவுரை
வழங்கியது. மத்திய அரசு நிதி உதவி திட்டத்தில், மழைநீர் கட்டமைப்பு அமைக்க,
சிறு விவசாயிகளுக்கு, 4,000 ரூபாயும், பெரு விவசாயிகளுக்கு, 2,000
ரூபாயும் வழங்கப்பட்டது.பாசன கிணற்றின் சர்வே எண், பட்டா, சிட்டா ஆகிய
ஆவணங்களுடன் வி.ஏ.ஒ., சான்று பெற்று விண்ணப்பம் அளித்த விவசாயிகளின் வங்கி
கணக்கில், மானிய தொகை பொதுப்பணித்துறை மூலம் செலுத்தப்பட்டது. விவசாயிகள்
மானிய தொகை பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், பாசன கிணறுகளில்
மழைநீர் கட்டமைப்பு அமைக்காமல் உள்ளனர்.சேலம் மாவட்டத்தில், ஏற்காடு,
எடப்பாடி ஆகிய பஞ்., யூனியன்களை தவிர, மற்ற 18 பஞ்., யூனியன்களில், 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மானிய தொகை பெற்றுள்ளனர். மாவட்டம்
முழுவதிலும், 5,000 விவசாயிகள் மட்டுமே பாசன கிணறுகளில் மழைநீர் கட்டமைப்பு
அமைத்துள்ளனர்.பனமரத்துப்பட்டி பஞ்., யூனியனில், 1,200 விவசாயிகளுக்கு
மானிய தொகை வழங்கப்பட்ட நிலையில், நூற்றுக்கும் குறைவான விவசாயிகள் பாசன
கிணறுகளில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைத்துள்ளனர்.
பொதுபணித்துறை,
வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து, மழைநீர் சேமிப்பு தொட்டி
அமைக்க வேண்டிய அவசியம் குறித்து, விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியும்,
விவசாயிகள் கண்டுகொள்ளவில்லை.மழைநீர் கட்டமைப்பு அமைக்காத விவசாயிகளிடம்
இருந்து, 9 சதவீதம் வட்டியேடு மானியத் தொகை திரும்ப வசூல் செய்யப்படும் என,
பொதுபணித்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.அதில், பாசன
கிணறுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, மானியம் பெற்ற விவசாயிகள்,
மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை பாசன கிணறுக்கு அருகே ஏற்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசு அலுவலர்கள் பாசன கிணறுக்கு அருகே உள்ள கட்டமைப்பை
பார்வையிட வருகின்றனர். பணி முடித்த விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் பராமிப்பு
தொகை வழங்கப்படும்.பணி முடிக்காத விவசாயிகளிடம் இருந்து மானியத்தொகையை, 9
சதவீதம் வட்டியுடன் வசூலிப்பதற்கு, விவசாயிகளின் பெயர் பட்டியலை மாவட்ட
கலெக்டரிடம் கொடுக்கப்படும். இதனை தவிர்க்க, மானியம் பெற்ற விவசாயிகள்
உடனடியாக பாசன கிணற்றுக்கு அருகே மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க
வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பனமரத்துப்பட்டி ஏரி பாதுகாப்பாளர்கள்
சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:மானிய தொகை பெற்ற விவசாயிகள் பாசன
கிணறுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்காமல் உள்ளதால், வறட்சி
காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மழைநீர் கட்டமைப்பு அமைக்க
வலியுறுத்தி, கிராமம்தோறும் சென்று, மாதிரி கட்டமைப்பும் நிறுவி,
விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகள் பாசன கிணறுகளில்
மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க முன் வரவேண்டும்.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.