/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேயர் வேட்பாளர் மீது தலைமைக்கு பறக்குது புகார்
/
மேயர் வேட்பாளர் மீது தலைமைக்கு பறக்குது புகார்
ADDED : செப் 19, 2011 01:46 AM
சேலம்:சேலம் மாநகர அ.தி.மு.க., வில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல்
வெடித்துள்ளது. அ.தி.மு.க., மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள
சவுண்டப்பனுக்கு எதிராக, கட்சி தலைமைக்கு புகார் அனுப்பப்பட்டு வருவது
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு, கடந்த
வாரம் அ.தி.மு.க., சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. சேலம்
மாநகராட்சியில், மேயர் பதவிக்கு 63 பேரும், கவுன்சிலர் பதவிக்கு, 150
க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர். முன்னாள் மேயர்
சுரேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நடேசன், வெங்கடாசலம்,
கவுன்சிலர்கள் பாலு, பாலசுப்ரமணி, பகுதி செயலாளர் சண்முகம், சூரமங்கலம்
முன்னாள் பகுதி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்
மேயர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தினர்.அ.தி.மு.க., வினர் யாரும்
எதிர்பார்க்காத வகையில், முன்னாள் துணை மேயர் சவுண்டப்பன் சேலம் மாநகராட்சி
வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சேலம் மாநகர், மாவட்ட செயலாளர் செல்வராஜின்
ஆதரவால் தான், இவருக்கு மேயர் 'சீட்' கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி
உள்ளது.சவுண்டப்பனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது, சேலம் மாநகர அ.தி.மு.க.,
வில், ஒரு தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்தம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில், சவுண்டப்பன் பரிச்சயம் இல்லாத
நபராக இருக்கிறார். அதனால், தேர்தலில் அ.தி.மு.க., வுக்கு பின்னடைவு ஏற்பட
வாய்ப்பு உள்ளது.சேலம் மாநகராட்சி மேயர் சீட் விவகாரத்தில், மாநகர
அ.தி.மு.க., வில் உச்சக்கட்ட பூசல் வெடித்துள்ளது. பலர் சீட் கிடைக்காத
ஆதங்கத்தில், சவுண்டப்பன் மீதான சர்ச்சை விவகாரங்களை துருவ
ஆரம்பித்துள்ளனர். அதை கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லவும்
திட்டமிட்டு வருகின்றனர்.ஒரு சில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகத்துடன், மேயர் வேட்பாளர் சவுண்டப்பன் நின்று கொண்டிருப்பதை போன்ற
புகைப்படங்களை, கட்சி தலைமையிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, தகவல்
வெளியாகியுள்ளது.கடந்த உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சி சூரமங்கலம்,
அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களிலும், மண்டல குழு தலைவர்
பதவியை தி.மு.க., எளிதாக கைப்பற்றியது. ஆனால், கொண்டலாம்பட்டி மண்டலத்தில்
மட்டும் கடும் போட்டி நிலவியது.இதில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில்,
தி.மு.க., வை சேர்ந்த மண்டல குழு தலைவர் மோகன் வெற்றி பெற்றார். மாநகராட்சி
57வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சீதாலட்சுமி. இவர் மேயர் வேட்பாளர்
சவுண்டப்பனின் மனைவி. கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் தேர்தல்
விவகாரத்தில், சீதாலட்சுமி தி.மு.க., வுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதாக
சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தையும், அ.தி.மு.க., தலைமைக்கு தட்டிவிட,
மாநகர அ.தி.மு.க., வினர் தயாராகி வருகின்றனர். எனவே, அ.தி.மு.க.,
வேட்பாளர்கள் மாற்றம் வெளியானால், அதில் சவுண்டப்பன் பெயர் நிச்சயம்
இருக்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.