/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் 1919 முதல்...
/
சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் 1919 முதல்...
ADDED : ஆக 29, 2025 01:43 AM
'ஜீவனின் உண்மை இயல்பு சச்சிதானந்தமே' என்றார், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். 'ஒவ்வோர் ஆன்மாவும் உள்நிறைந்த தெய்வத்தன்மை உடையது' என்றார், சுவாமி விவேகானந்தர். நாம் அனைவரும் இந்த உண்மையை உணர, உய்ய, உயர நிகழ்ந்ததே, பகவான் ராமகிருஷ்ண அவதாரம்.
நாம் ஒவ்வொருவரும் நம் தெய்வத்தன்மையை உணர்ந்து, ஆனந்தத்தில் நிலை பெற்று இருக்க வேண்டும். அதேபோல் மற்றவர்களும், தெய்வத்தன்மை மிகுந்தவர்களே என்று உணர்ந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையை உணர்த்த உருவானதே, ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம்.
கடந்த, 105 ஆண்டுக்கு மேலாக, பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆசிகளுடன், சேலம் மாவட்ட மக்களுக்கு, சமய, சமுதாய, கல்வி, மருத்துவ, சுய முன்னேற்ற, கலாசார, ஆன்மிக சேவைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் தொண்டு அமைப்பான, சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் உருவாக காரணமாக அமைந்தவை, ராமகிருஷ்ண சமாஜம் மற்றும் விவேகானந்த வித்யாஸ்ரமம் ஆகும்.
இதன் சூத்ரதாரியாக திகழ்ந்தவர் ஸ்ரீமான் நாமகிரி ஐயர். இவர் ராஜாஜி, ராமகிருஷ்ண ஐயர் முதலான நண்பர்களுடன் இணைந்து, பெங்களூரு ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் தவத்திரு சுவாமி நிர்மானந்த மஹராஜின் வழிகாட்டுதல்படி, சேலத்தில் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் அமைய அரும்பாடுபட்டார்.
இதன் விளைவாக, நாமகிரி ஐயர், டாக்டர் நாராயண ஐயர், லஷ்மி நரசிம்ம செட்டியார் முதலானோர் முயற்சியால் பெறப்பட்ட நிலத்தில், பகவான் ராமகிருஷ்ணர் அருளால், 1919 ஜூன், 13ல், சுவாமி நிர்மலானந்த மஹராஜின் பொற்கரங்களால் பூமிபூஜை செய்யப்பட்டு, ஆசிரம கட்டடப்பணி தொடங்கியது. அன்று முதலே, ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் அறப்பணி தொடங்கிவிட்டது. பகவான் ராமகிருஷ்ணரின் உரையாடல் அடங்கிய புத்தக தொகுதியின் முதல் பாகத்தை, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு, சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம ஞானயக்ஞத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார் நாமகிரி ஐயர்.
கட்டட, அறப்பணிகள்கடந்த, 1919ல் தொடங்கிய, சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம கட்டுமானப்பணி, 9 ஆண்டு நடந்தது. இப்பணி ஒருபுறம் நடந்தாலும், 1919 முதலே, ஆசிரம திருப்பணிகளும் மற்றொருபுறம் நடந்து வந்தது. பகவான் ராமகிருஷ்ணரின், 85வது ஜெயந்தி வைபவம், சுவாமி விவேகானந்தரின், 58வது ஜெயந்தி வைபவம் என, ஆன்மிக அறப்பணிகள் ஒருபுறம் சிறப்பாக நடந்து வந்தன.
சேலம் ஆசிரமம், பூஜை, ஆரத்தி, ஆன்மிக நிகழ்ச்சிகளுடன், சுவாமி விவேகானந்தரின், 'சிவ சேவையே ஜீவ சேவை' வரிகளுக்கு விளக்கமாக, 1933 பிப்., 26ல், ராமகிருஷ்ண இலவச ஆயுர்வேத வைத்ய சாலையை, சேலம் டவுன் கணக்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தொடங்கி, மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கியது. இந்த இலவச வைத்ய சாலையை, சேலம் விஜயராகவாச்சாரியார் திறந்து வைத்தார். இந்த வைத்திய சாலை, 'ஸ்ரீராமகிருஷ்ண சேவா மந்திர்' என, பதிவு செய்யப்பட்டது. 1935ல், சேலம் அழகாபுரத்தில், வேகமாக பரவிய நரம்பு சிலந்தி நோயை, ராமகிருஷ்ண சேவா மந்திர் கட்டுப்படுத்தியதோடு, அந்நோய் பரவ காரணமாக இருந்த குடிநீர் கிணற்றில், சுகாதார ஏற்பாடுகளை செய்து தந்தது.
வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த ஆசிரம வைத்ய சாலைக்கு, தமது மகள் நினைவாக, 'வீரலஷ்மி ஹால்' என்ற கட்டடம் கட்டி, அதை வாடகை இன்றி வழங்கினார். 'வருமுன் காப்போம்' என்பதற்கேற்ப, ஏழை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உண்டாக, 'இலவச பால் உணவு வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்பட்டது.
நிறைவாக, 1948 ஆகஸ்டில், ஆசிரமம் அருகே, சேலம் நகராட்சி வழங்கிய இடத்தில், வீரசாவர்க்கர் சாலையில், சொந்த கட்டடத்தில், ராமகிருஷ்ண வைத்ய சாலை செயல்பட தொடங்கியது. அனைத்துலக ராமகிருஷ்ண இயக்க பொதுச்செயலர் ஸ்ரீமத் சுவாமி மாதவானந்த மஹராஜ் தொடங்கி வைத்தார்.
ஆயுர்வேத வைத்தியம், ேஹாமியோபதி வைத்தியம் எனத்தொடங்கிய, ராமகிருஷ்ண தர்ம வைத்திய சாலை, தற்போது நவீன உபகரணங்களுடன் பல்துறை மருத்துவர்களுடன் தினம் தினம் பல நுாறு பயனாளிகளுக்கு சிகிச்சை வழங்கி மகிழ்கிறது.
மேலும் பல்வேறு கிராமப்புறங்களுக்கும் சென்று இலவச பல்துறை மருத்துவ முகாம்களை நடத்தி வருவதோடு, இலவச முகாம்களில் தொடர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, ராமகிருஷ்ண தர்ம வைத்திய சாலை மூலம், தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ சேவையை தொடர்ந்து, 1935 ஆக., 31ல், ஆசிரம பின்பகுதியில் உள்ள கல்லாங்குத்துார் பகுதியில், இலவச இரவு பாடசாலை ஏற்படுத்தி, கல்வி சேவையிலும் கால் பதித்தது
.சுவாமி விஸ்வம்பரானந்தர், அப்பகுதி ஏழை மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுத்தார். உலகியல் கல்வியோடு, உயிருள்ள ஆன்மிகக்கல்வியும் போதித்தார். தற்போது, 1 முதல், பிளஸ் 2 வரை உள்ள, 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இந்த இலவச டியூசன் சென்டரில் மாலை உணவுடன் தகுதியான ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி, இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கணினி, தையல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மருத்துவம், கல்வி, நிவாரண பணிகளில் தன்னலமின்றி தொண்டாற்றும் சேவை அமைப்புகளில் முன்னணியில் உள்ள, ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம நிவாரணப்பணி, இன்றிலிருந்து சரியாக, 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஆம் அன்பர்களே, 1924ல், காவிரி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி கரையோர பகுதிகளில் வசித்த மக்கள், உடைமைகள், வீடுகளை இழந்து தவித்தனர்.
அந்த நேரம், சுவாமி விவேகானந்தரின், 'ஜீவ சேவையே சிவ சேவை, மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற மணிமொழிக்கு உயிர் கொடுக்கும்படி, சேலம் ஆசிரம அன்பர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருந்திய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர். சில ஆண்டுகளுக்கு முன், உலகையே புரட்டிப்போட்ட கொரோனா காலகட்டத்தில், நம் சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் ஆற்றிய சேவைப்பணிகளும், வழங்கிய நிவாரண உதவிகளும், சொல்லால் விவரிக்க இயலாது.

