ADDED : மார் 15, 2024 03:52 AM
ஒயர் மீது உரசியதில் தீ
வைக்கோல் கட்டு நாசம்
கொளத்துார்: கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கத்திரிப்பட்டி, நாயம்பாடியை சேர்ந்த, லாரி உரிமையாளர் அண்ணாதுரை. இவர் லாரியில் நேற்று முன்தினம் மன்னார்குடியில், 136 வைக்கோல் கட்டுகளை ஏற்றினார். தொடர்ந்து கத்திரிப்பட்டிக்கு புறப்பட்டார்.  நேற்று மதியம், கோவிந்தபாடி அடுத்த வன்னியர் நகர் அருகே வந்தபோது, மின்கம்பத்தில் இருந்து தொங்கி கொண்டிருந்த ஒயர் மீது வைக்கோல் கட்டுகள் உரசின. அதில் ஏற்பட்ட தீ விபத்தில், 15,000 ரூபாய் மதிப்பில், 50 வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமாகின. மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் குழுவினர், தீயை அணைத்து, 100க்கும் மேற்பட்ட கட்டுகள் எரியாமல் தவிர்த்தனர்.
ரூ.17 கோடியில் சாலைமேயர் துவக்கிவைப்பு
சேலம்: தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தில், சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், 8.89 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை; அம்மாபேட்டை மண்டலத்தில், 8.44 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
அதில் மேயர் ராமச்சந்திரன், பணிகளை தொடங்கி வைத்தார். மண்டலக்குழு தலைவர் அசோகன், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
எஸ்.டி., பேரவை ஆர்ப்பாட்டம்மேட்டூர்: தமிழ்நாடு எஸ்.டி., பேரவை சார்பில், மேட்டூர் ஸ்டேட் வங்கி முன், நேற்று மதியம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். அதில் கொளத்துார், பாலமலை ஊராட்சியில் தெற்கு பகுதிக்கு தார்ச்சாலை அமைத்தல்; மேட்டூர் வட்டத்தில் பழங்குடி அல்லாத பிரிவினருக்கு முழுமையாக விசாரித்த பின் தகுதியானவர்களுக்கு மட்டும், எஸ்.டி., சான்றிதழ் வழங்குதல்; மலையாளி மக்களுக்கு, 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பொதுச்செயலர் மோகன், பொருளாளர் ராஜீ, மலையாளி சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
9ம் வகுப்பு மாணவர்கிணற்றில் சடலமாக மீட்பு
நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி, ஊஞ்சப்பட்டியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 15, அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். அவரது பெற்றோர் இறந்த நிலையில் உறவினர் ஜெயக்குமார், 46, வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று காலை பள்ளி செல்லும்போது சிறுவனை காணவில்லை. இந்நிலையில் வீடு அருகே உள்ள கிணற்றில், சிறுவனின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. நங்கவள்ளி தீயணைப்புத்துறையினர், உடலை மீட்டனர். ஜெயக்குமார் புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
மான் வேட்டைக்கு முயற்சி3 பேருக்கு அபராதம்
ஓமலுார்: சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகம் பண்ணிகரடு பீட் காப்புக்காடு அணை முனியப்பன் கோவில் பகுதியில் நேற்று காலை, தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓமலுார், வட்டக்காட்டை சேர்ந்த மணிகண்டன், 27, முனியப்பன், 39, மாரியப்பன், 48, ஆகியோரை பிடித்து விசாரித்ததில் மான் வேட்டைக்கு முயன்றது தெரிந்தது. பின் வழக்கு பதிவு செய்து, 2  லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

