ADDED : மார் 18, 2024 03:18 AM
நகராட்சியில் சுவர்
விளம்பரத்துக்கு தடை
சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நேற்று நடந்தது. முள்ளுவாடி கேட் அருகே தொங்கும் பூங்கா சுற்றுச் சுவர்களில் எழுதி இருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை, வாகன உதவியுடன், 'ஸ்பிரே' மூலம் பெயின்ட் அடித்து அழிக்கும் பணி நடந்தது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தனியார் சுவர்களில் அவர்களின் அனுமதியுடன் கூட சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதியில்லை. கிராமப்புறங்களில் தனியார் சுவர்களில் அவர்களின் அனுமதியுடன் சுவர் விளம்பரம் செய்யலாம்.
அதற்கு உரிய அலுவலரிடம் முன் அனுமதி ஆணை பெற வேண்டும். தனியார் சம்மத கடித நகல் வைத்திருக்க வேண்டும். இத்தகைய விளம்பரங்கள், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்,'' என்றனர்.
சேலம் மாவட்டத்தில்'ட்ரோன்' பறக்க 2 நாள் தடை
சேலம்: பிரதமர் மோடி, சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக, மாவட்ட போலீஸ் எல்லையில் மார்ச், 18, 19ல்(இன்று, நாளை), எந்த ட்ரோன், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளததாக, சேலம் எஸ்.பி., அருண்கபிலன் தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர் 300 பேர்தி.மு.க.,வில் ஐக்கியம்
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அஜித் ரசிகர்கள் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் முன்னிலையில், வெங்கடேஷ் என்பவர் தலைமையில், அஜித் ரசிகர்கள், 300 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
அவர்களுக்கு, எம்.எல்.ஏ., பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தி.மு.க., மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

