/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
/
தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ADDED : மார் 16, 2024 07:20 AM
மேட்டூர் : சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, சின்னபார்க்கில் இருந்து பணியாளர்கள் பேரணியாக சென்று, நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உள்ளாட்சி பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி தேவி தொடங்கி வைத்தார். சங்க கிளை தலைவர் இளங்கோ, செயலர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். அதில் அரசு உத்தரவுப்படி தினமும், 610 ரூபாய் தருதல்; குப்பையை அகற்ற தளவாடங்கள் வழங்குதல்; 25 ஆண்டுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு சேமநல நிதி, கணக்கு சீட்டு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தால் நகராட்சியில் ஆங்காங்கே குப்பை அள்ளப்படாமல் தேங்கின. இன்றும் போராட்டம் நீடிக்கும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேநேரம், 16 நிரந்தர பணியாளர் உள்பட, 20 பேர் பணிக்கு சென்றனர்.

