/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பை வண்டியில் தூய்மை பணியாளர்கள் பயணம்
/
குப்பை வண்டியில் தூய்மை பணியாளர்கள் பயணம்
ADDED : ஜன 01, 2024 11:12 AM
அயோத்தியாப்பட்டணம்: துாய்மை பணியாளர்கள் குப்பை வண்டியிலேயே பயணிப்பதால், தொற்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. இதனால் மாற்று வசதி ஏற்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.
அயோத்தியாப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து, சில வார்டுகள், 5 கி.மீ., வரை உள்ளன. அங்கு, 12 துாய்மை பணியாளர்கள், 20 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.
அவர்கள் குப்பை சேகரிக்க, 1.90 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள குப்பை வண்டியில், முன்புறம் ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து செல்லலாம். மற்ற துாய்மை பணியாளர்கள், அந்த வண்டி பின்புறம், குப்பை சேகரித்து செல்லும் இடத்தில் அமர்ந்து பயணிக்கும் அவல நிலை தொடர்கிறது. குறிப்பாக தினமும் பணி தொடங்கும்போது டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட வார்டுக்கு செல்லும்போதும், பணி முடிந்து, அங்கிருந்து திரும்பி அலுவலகத்துக்கும் வரும்போதும், அந்த வண்டியில் குப்பை கொட்டும் இடத்திலேயே அமர்ந்து பயணிக்கின்றனர். இது தொற்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது.
இதுகுறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
குப்பை சேகரிப்பு பேட்டரி வாகனத்தில் ஆப்பரேட்டருடன் ஒருவர் செல்லலாம். நடந்து சென்றால் நேரமாகும் என்பதால், வண்டியில் குப்பை கொட்டும் இடத்திலேயே அமர்ந்து செல்கிறோம். துர்நாற்றம் வீசுவதோடு தொற்று அபாயம் இருந்தாலும் வேறு வழி இல்லை. மாற்று வசதி ஏற்படுத்திக்கொடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் காலசாமி கூறுகையில், ''குப்பை வண்டி துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் குப்பை கொட்டும் இடத்தில் அமர்ந்து பயணிப்பது தவறு.
இதுகுறித்து துாய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மற்றபடி அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.