/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகர் சிலைகளை கரைக்க பாதுகாப்பு ஏற்பாடு
/
விநாயகர் சிலைகளை கரைக்க பாதுகாப்பு ஏற்பாடு
ADDED : ஆக 29, 2025 01:43 AM
சேலம், சேலம் மாநகரில் ஹிந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள், நண்பர் குழுவினர், தனியார் அமைப்புகள் சார்பில் வீதிகள், வீடுகள்தோறும் என, 2,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, நேற்று முன்தினம் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். இவற்றில், 100க்கும் மேற்பட்ட சிலைகளை நேற்று முன்தினம், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இரண்டாம் நாளான நேற்று காலை முதலே, மாநகரில் விநாயகர் சிலைகளைை கரைப்பதற்கான ஒரே இடமான கன்னங்குறிச்சி, மூக்கனேரியில் ஒருவர் பின் ஒருவராக, 300க்கும் மேற்பட்ட சிலைகளை கொண்டு வந்து கரைத்தனர். இன்றுடன், அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள சிலைகள், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக வந்து, சிலைகளை கரைக்க உள்ளனர். இதற்கு மாநகர போலீஸ் சார்பில், 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் மூக்கனேரியில் தண்ணீர் ஆழம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் கட்டப்பட்டு, ஏரிக்குள் சிலைகளுடன் இறங்க வசதியாக தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது. பெரிய சிலைகளை, ஏரிக்குள் கொண்டு சென்று கரைக்க பெரிய மிதவை படகு தயார் செய்துள்ளனர். சிறு சிலைகளை எடுத்துச்செல்ல பரிசல்களும் தயாராக நிறுத்தியுள்ளனர். ஏரியை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, மின் விளக்குகள், ஒலி பெருக்கி வசதிகள் ஏற்பாடு செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இடங்கள் ஆய்வு
இன்று ஆத்துார், முட்டல் ஏரியில் விநாயகர் சிலை கரைப்பதற்கான இடம், வழிப்பாதை குறித்து, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அதேபோல் தம்மம்பட்டியில் ஜங்கமசமுத்திரம் தடுப்பணை, செந்தாரப்பட்டி ஏரி ஆகிய இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
263 சிலைகள் கரைப்பு
நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில், 165 சிலைகள், பூலாம்பட்டி காவிரி ஆறு, பில்லுக்குறிச்சி வாய்க்கால், ஓணாம்பாறை வாய்க்கால் ஆகிய இடங்களில், 98 சிலைகள் கரைக்கப்பட்டன.
அன்னதானம் வழங்கல்
ஆத்துார், ராணிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில் நேற்று, ராணிப்பேட்டை நண்பர் குழு சார்பில் அன்னதானம் நடந்தது. 3,000 பேருக்கு இலை போடப்பட்டு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவிலில், மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

