ADDED : செப் 20, 2011 01:03 AM
சேலம்: நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை காரணமாக, கொண்டைக் கடலை விலையில் கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது.
பொரி கடலை, கடலை மாவு போன்ற பொருட்களின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் சிறப்பு நெய்வேத்யமாக, சுண்டல் படைப்பது வழக்கமாக உள்ளது. செப்டம்பர் 29ம் தேதி நவராத்திரி துவங்குகிறது. நவராத்திரியை முன்னிட்டு, கொண்டைக் கடலையின் விற்பனையில் அதிகரிக்கும். சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் பண்டிகை வருவதால், கொண்டைக் கடலைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, கொண்டைக் கடலையின் விலையில் கிலோவுக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை வெள்ளை கொண்டைக் கடலை மொத்த விலையில் குவிண்டால், 9,200 ரூபாய்க்கு விற்றது, 10 ஆயிரமாகவும், சிகப்பு கொண்டைக் கடலை, 4,800 ரூபாய்க்கு விற்றது, 5,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, சில்லரை விலையில் வெள்ளை கொண்டைக் கடலை கிலோ, 94 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய் அதிகரித்து, 104 ரூபாய்க்கு விற்கிறது. சிகப்பு கொண்டைக் கடலை, 50 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய் உயர்ந்து கிலோ, 60 ரூபாய்க்கு விற்கிறது. வரத்து குறைந்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கொண்டைக் கடலையை மூலப் பொருளாக கொண்டு தயார் செய்யப்படும், கடலை மாவு, பொரி கடலை, கடலை பருப்பு ஆகியவற்றின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. பொரி கடலை மொத்த விலையில், 54 கிலோ எடை கொண்ட மூட்டை, 2,400 ரூபாய்க்கு விற்றது, 3,400 ரூபாய்க்கு விற்கிறது. சில்லரை விலையில் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலை மாவு மொத்த விலையில், 50 கிலோ எடை கொண்ட மூட்டை, 2,800 ரூபாய்க்கு விற்றது, 3,300 ரூபாய்க்கு விற்கிறது. மொத்த விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சில்லரை விலையில் கிலோ, 45 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாய்க்கு விற்கிறது. கடலை பருப்பு விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கடலை பருப்பு குவின்டால், 4,100 ரூபாய்க்கு விற்றது, 5,600 ரூபாய்க்கு விற்கிறது. சில்லரை விலையில் கிலோ, 43 ரூபாய்க்கு விற்றது, 60 ரூபாய்க்கு விற்கிறது.
சேலம் மளிகைக் கடை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது: தமிழகத்தின் கொண்டைக் கடலை தேவையை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தர்மபுரி, விழுப்புரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களே நிறைவு செய்கின்றன. நடப்பாண்டில் இங்கு எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மஹராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு, கொண்டைக் கடலை வரத்து முற்றிலும் நின்று விட்டது. தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி, சரஸ்வதி பூஜையை தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வர உள்ளது. தொடர் பண்டிகை காரணமாக, இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பெரிய வியாபாரிகள் அதிக அளவில் கொண்டைக் கடலையை இருப்பு வைக்க துவங்கி விட்டனர். அதனால், விலையில் குவிண்டாலுக்கு,1,000 ரூபாய் வரையும், கிலோவுக்கு, 10 ரூபாய் வரையும் உயர்வு ஏற்பட்டுள்ளது, என்றார்.

