/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
/
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., மீண்டும் கைது
ADDED : ஜூலை 30, 2011 01:02 AM
ஓமலூர்: ஓமலூர் அருகே ஜாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில், பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ., தமிழரசு நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, நில மோசடியில் கைது செய்யப்பட்ட அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ., தமிழரசு அடிக்கடி போராட்டம் நடத்தி வந்தார். இது தொடர்பான, வழக்கு ஓமலூர் போலீஸில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2009 ஆகஸ்ட் 30ம் தேதி தமிழரசுவின் உறவினர்கள் சரவணன், நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் காரில், சுங்கசாவடி வழியாக சென்றுள்ளனர். அப்போது, சுங்கம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து, சுங்கசாவடி பகுதிக்கு காரில் சென்ற தமிழரசு, பணியில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து, சுங்கம் வசூலித்த பாலமுருகன் (46) என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு, ஜாதி பெயர் திட்டியுள்ளார். ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன், தாக்குதல் தொடர்பாக ஓமலூர் போலீஸில் புகார் செய்தார். தமிழரசு உள்பட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து, அப்போதைய டி.எஸ்.பி., சந்தானபாண்டியன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், ஓமலூர் டி.எஸ்.பி.,யாக பதவியேற்ற சுப்ரமணியன், இவ்வழக்கு தொடர்பாக, கடந்த ஜூன் 25ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கில்,மாஜி எம்.எல்.ஏ., தமிழரசு ஆஜராகாமல் இருந்தார். தற்போது, டி.எஸ்.பி.,யாக உள்ள முத்துகருப்பன் நிலுவையில் கிடக்கும் இவ்வழக்கு மீது நடவடிக்கை மேற்கொண்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பா.ம.க., மாஜி எம்.எல்.ஏ.,தமிழரசு, நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால், நிலுவையில் உள்ள வழக்கில் கைது செய்ய, சிறையில் இருக்கும் மாஜி எம்.எல்.ஏ., வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்புதல் கடிதத்துடன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் பேரில், தமிழரசை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நிலமோசடி வழக்கோடு சேர்த்து வரும் 9ம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதனால், தமிழரசுக்கு நில மோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அடுத்து பாலமுருகன் தாக்கப்பட்ட வழக்கில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.