/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க.,வினர் ஓட்டம் துரத்திப்பிடிப்பு! : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
/
தி.மு.க.,வினர் ஓட்டம் துரத்திப்பிடிப்பு! : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
தி.மு.க.,வினர் ஓட்டம் துரத்திப்பிடிப்பு! : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
தி.மு.க.,வினர் ஓட்டம் துரத்திப்பிடிப்பு! : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
ADDED : ஆக 02, 2011 01:01 AM
சேலம் : சேலத்தில் நேற்று போராட்டம் நடத்திய தி.மு.க.,வினரை, போலீஸார் விரட்டிப்படித்து வேனில் ஏற்றினர். மாவட்டம் முழுவதும், 2,300 பேர் கைது செய்யப்பட்டனர். 'தி.மு.க.,வினர் மீது போடப்படும் பொய் வழக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், ஆகஸ்ட் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதற்கிடையே, சமச்சீர் கல்வி அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு, மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்திய, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரனும், கைது செய்யப்பட்டார். அதனால், திட்டமிட்டபடி, தி.மு.க.,வினரின் போராட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. போராட்டம் நடத்துவதற்கும், போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். இந்நிலையில், நேற்று காலை சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன் கட்சியினர் பலர் குவிந்தனர். செல்வகணபதி எம்.பி., தலைமையில் மாநகர செயலாளர் கலையமுதன் மற்றும் கட்சியினர், தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை மாநகராட்சி அருகில், போலீஸார் கைது செய்தனர். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா தலைமையில் மேயர் ரேகாபிரியதர்ஷினி, மண்டலக்குழு தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களையும் கைது செய்தனர். ராஜா கூறுகையில்,''தி.மு.க.,வினர் மீது தமிழக அரசு திட்டமிட்டே பொய் வழக்கு போடுகிறது. அ.தி.மு.க., அரசு அடக்குமுறையை கையாளுகிறது,'' என்றார்.
எம்.பி., செல்வகணபதி கூறுகையில்,''தமிழகத்தில், மினி எமர்ஜென்சி நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில், ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., அரசு, அராஜக போக்கை கடைபிடித்து, ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினரை கைது செய்துள்ளது. ஒரு சில தி.மு.க., பிரமுகர்களை மட்டும் கைது செய்து, போராட்டத்தை முடக்க நினைத்தனர். அப்போதே, எங்களது அறப்போராட்டம் வெற்றி பெற்று விட்டது,'' என்றார். கோட்டை ரோட்டில், நான்கு புறங்களிலும் இருந்து தி.மு.க.,வினர் கொடிகளையும், பேனர்களையும் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் சத்யபிரியா, கூடுதல் துணை கமிஷனர் ராசராசன் மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.
பத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்களை கொண்டு வந்து, தி.மு.க.வினரை கைது செய்து அழைத்து சென்றனர். கட்சியினர் பலர், கைதுக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர். ஓட்டம் பிடித்தவர்களையும், போலீஸார் வேனில் ஏற்றினர்.சேலம் வாசவி மஹால், நேரு கலையரங்கம், ஸ்டோக்ஸ் ஹால், கமலா மண்டபம், கருணாநிதி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் தங்க வைக்கப்பட்டனர். சேலம் மாநகரில், 75 பெண்கள் உள்பட, 1,828 பேரும், ஓமலூர், தீவட்டிப்பட்டி, கொண்டலாம்பட்டி, வீராணம், அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட இடங்களில், 477 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, சேலம் முழுவதும் போலீஸார் குவிக்கப் பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தொண்டர்கள் 'எஸ்கேப்'
சேலத்தில், தி.மு.க.,வினர் நேற்று நடத்திய போராட்டத்தில், புறநகர் பகுதிகளில் இருந்து கட்சி தொண்டர்கள் அவ்வளவாக வரவில்லை. மாநகரப் பகுதிகளிலும், கடந்த ஆட்சியில் வசூல் பார்த்து, வருவாய் ஈட்டிய நிர்வாகிகள் மட்டுமே ஓரளவு கலந்து கொண்டனர். எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜா, மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்ளிட்ட பிரமுகர்கள் தவிர, பெரிய அளவிலான ஆட்கள் யாரும் பங்கேற்கவில்லை. அடிமட்ட தொண்டர்கள் பலர், எதற்கு வம்பு என ஒதுங்கிக் கொண்டனர். சிலர் பெயரளவுக்கு வந்து விட்டு, ஆங்காங்கே நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.