ADDED : மார் 18, 2024 03:22 AM
ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம்
7 பேர் பங்கேற்க நிர்வாகம் அனுமதி
நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, தினசரி அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்திற்கான கட்டணம், கட்டளைதாரர்களால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருநாள் அபிஷேகத்தில் அதிகபட்சமாக, 5 பேர் பங்கேற்கலாம். ஒருவருக்கு, 6,000 வீதம், மொத்தம், 30,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
தற்போது, அபிஷேக பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஒருநாள் அபிஷேகத்தில், மேலும், இரண்டு பேர் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும், 7 பேர் அபிஷேகத்தை ஏற்று நடத்தலாம். அதற்காக, 42,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அறிவியல் கண்காட்சி போட்டிஅரசு பள்ளி மாணவர் தேர்வு
குமாரபாளையம்: மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சி போட்டியில், குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் தேர்வாகி உள்ளார்.
குமாரபாளையம், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர் மகத்ராஜ். இவர், மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளில், அறிவியல் கண்காட்சி பிரிவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தார். தொடக்கக்கல்வி இயக்குனர் குணசேகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த மாணவர், அரசு சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெற்றுள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள், பி.டி.ஏ., நிர்வாகிகள் பாராட்டினர்.

