/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஷம் கலந்த மது அருந்திய மகன் சீரியஸ்; தந்தை பலி
/
விஷம் கலந்த மது அருந்திய மகன் சீரியஸ்; தந்தை பலி
ADDED : ஜூன் 06, 2025 02:34 AM
கெங்கவல்லி:போதைக்கு அடிமையானதால், திருமணமாகாத விரக்தியில், மதுவில் விஷம் கலந்து, மகன் குடித்துவிட்டு வைத்திருந்தார். அதில் விஷம் இருப்பது தெரியாமல், மதுபானம் என நினைத்து குடித்த தந்தை பலியானார்.
சேலம் மாவட்டம் தலைவாசல், புனல்வாசலை சேர்ந்தவர் கண்ணன், 52, சகுந்தலா தம்பதியின் மகன் கதிரவன், 21. காட்டுக்கோட்டையில் உள்ள கார் சர்வீஸ் கடையில் பெயின்டராக பணிபுரிகிறார். இவர், மதுவில் குளிர்பானம் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த 3ல் வேலைக்கு சென்று விட்டு வந்த கதிரவன், மது அருந்திவிட்டு, மீதியை, அவரது பைக் டேங்க் கவரில் வைத்து இருந்தார். அதை, தந்தை கண்ணன் எடுத்து குடித்தார். சில மணி நேரத்தில், கதிரவன், கண்ணன் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதுகுறித்து, மகனிடம் சகுந்தலா விசாரித்தார்.
அப்போது, 'போதைக்கு அடிமையானதால் யாரும் எனக்கு பெண் தருவதில்லை. திருமணம் ஆகாததால், மதுவில் விஷம் கலந்து குடித்தேன்' என கூறினார்.
உடனே, கணவர் மற்றும் மகனை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அந்த பெண் சேர்த்தார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கண்ணன் உயிரிழந்தார். கதிவரன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.