ADDED : பிப் 20, 2024 10:16 AM
ஆத்துார்: ஆத்துார் பகுதியில், மழை வேண்டியும், திருமண தோஷம் நீங்க வேண்டி 'காமன் திருவிழா' எனும் காமட்டா சுவாமி திருவிழா நடந்து வருகிறது.ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், பல ஆண்டுகளாக 'காமட்டா' எனும், 'காமன் திருவிழா' நடந்து வருகிறது.
விழாவையொட்டி, கிராமத்தில் உள்ள கோவிலின் அருகில் பச்சை பந்தல் அமைத்து, மேடை பகுதியில் களி மண்ணால் ஆண், பெண் உருவத்தில் வடிவமைத்த சிலைகளை வைக்கின்றனர்.
முதல் நாள் கிராம மக்கள் வீடுகளில் மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்வர். அப்போது, 12 முதல், 15 வயக்குட்பட்ட வயதுக்கு வராத இளம் சிறுமிகள், களி மண்ணால் செய்துள்ள காமட்டாப்பன் சிலைகளுக்கு பூஜை செய்வர்.
அப்போது, இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் ஒன்று சேர்ந்து குடில் அமைத்த இடத்தில், கும்மி பாடல்களை பாடியபடி நடனமாடுவர். இரண்டாம் நாளில், அச்சிலைகளை சிறுமிகள் தலையில் சுமந்து கொண்டு, ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைத்துவிடுவர்.
இவ்வாறு, காமட்டா சுவாமிக்கு பூஜை செய்வதால் மழை பொழிவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி, ஆத்துார், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வீரகனுார், காட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், சில தினங்களாக காமாட்டா பூஜை நடந்து வருகிறது. நேற்று நரசிங்கபுரத்தில், ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, வழிபாடு செய்தனர்.

