/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
படிப்படியாக மூடப்படும் துணை அஞ்சலகங்கள்
/
படிப்படியாக மூடப்படும் துணை அஞ்சலகங்கள்
ADDED : அக் 18, 2025 12:57 AM
சேலம்,சேலம், பழைய சூரமங்கலம், ரயில்வே நகரில் இயங்கும் துணை அஞ்சலகம் மூடப்பட்டு, வரும், 21 முதல், அது தலைமை அஞ்சலகத்தில் இணைக்கப்படுகிறது. இதை கண்டித்து, இ.கம்யூ., - மா.கம்யூ., கட்சிகள் இணைந்து, சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் முன், நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. மேற்கு மாநகர் மா.கம்யூ., செயலர் கணேசன், இ.கம்யூ., சூரமங்கலம் மண்டல செயலர் கணேசன் தலைமை வகித்தனர்.
மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் குமார் பேசுகையில், ''60 ஆண்டுக்கு மேலாக இயங்கும் துணை அஞ்சலகத்தை மூடினால், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். துணை அஞ்சலகம் மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து வரும், 27 முதல், அரிசிப்பாளையம் துணை அஞ்சலகம் மூடப்பட்டு, அவை, லீ-பஜார் அஞ்சலகத்துடன் இணைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மேற்கு கோட்ட அஞ்சலகத்தில், 45 துணை அஞ்சலகம் உள்ளது. ஏற்கனவே, ராசிபுரம் பஜார், சேலம் காசக்காரனுார் துணை அஞ்சலகங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து, ரயில்வே நகர், அரிசிப்பாளையம் துணை அஞ்சலகம் மூடப்படுவதால், துணை அஞ்சலக எண்ணிக்கை, 43 ஆக குறைகிறது.
அதேபோல் கிழக்கு கோட்டத்தில், 53 துணை அஞ்சலகங்கள் உள்ளன. ஏற்கனவே, மரவனேரி, மரக்கடை, செவ்வாய்ப்பேட்டை பஜார் உள்பட, 7 துணை அஞ்சலகம் மூடப்பட்ட நிலையில், வரும் 28ல், சேலம், 2ம் அக்ரஹாரத்தில் உள்ள தில்லை நகர் துணை அஞ்சலகம் மூடப்பட்டு, கிழக்கு தலைமை அஞ்சலகத்தில் இணைப்பதால், துணை
அஞ்சலக எண்ணிக்கை, 52 ஆக குறைகிறது.
இதுகுறித்து அஞ்சல் அதிகாரி கள் கூறுகையில், 'தபால் பட்டுவாடா பிரிவு இல்லாத அனைத்து துணை அஞ்சலகமும் மூடப்படுகிறது. அதற்கு தனித்துவ பின்கோடு எண் இருக்காது,'' என்றார்.