/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 நாள் பணி புறக்கணிப்பு சர்வேயர்கள் தொடக்கம்
/
2 நாள் பணி புறக்கணிப்பு சர்வேயர்கள் தொடக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:45 AM
சேலம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம், நேற்று மாநிலம் முழுதும் தொடங்கியது. சேலம் கலெக்டர் அலுவலக உள் வளாகத்தில், காலை, 11:20 மணிக்கு, நில அளவர் முதல், ஆய்வாளர்கள் வரை திரண்டு, மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனத்தை அறவே கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் அளவர்களை நியமித்தல்; உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கை ரத்து செய்தல்; துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைதல்; டி.என்.பி.எஸ்.சி., மூலம் நில அளவர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் முடிவை, தாமதமின்றி வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாவட்ட செயலர் செல்ல
முத்து, இணை செயலர் தமிழரசன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ், வி.ஏ.ஓ., சங்க செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சுதாகர் கூறுகையில், ''தமிழகம் முழுதும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால், நில அளவர் சார்ந்த ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும், 2ம் நாளாக பணி புறக்கணிப்பு நடக்கிறது,'' என்றார்.