/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போதை' நடமாட்டத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது: வாசன்
/
'போதை' நடமாட்டத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது: வாசன்
'போதை' நடமாட்டத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது: வாசன்
'போதை' நடமாட்டத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது: வாசன்
ADDED : மார் 07, 2024 02:07 AM
ஓமலுார், ''போதை பொருள் நடமாட்டத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள், செயல்படவில்லை என்பதை சுட்டி காட்டுகிறேன்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு, அருகே உள்ள சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி, காமலாபுரம் பகுதிகளில் இருந்து, 565 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த, நில அளவீடு முடிந்து அடுத்தகட்ட பணி நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட, 4 கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து மத்திய, மாநில அரசுக்கு தெரியப்படுத்த, பொட்டியபுரம், சட்டூர் மாரியம்மன் கோவில் திடலில் நேற்று, த.மா.கா., தலைவர் வாசன், விவசாயிகள், மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது, 'உங்கள் உண்மை நிலை குறித்து அரசுக்கு கொண்டு செல்வேன்' என, அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நெருங்கும் நிலையில் காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, தி.மு.க., ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். எந்த தேர்தலிலும் இல்லாதபடி, தற்போது, தி.மு.க.,வுக்கு எதிர்மறை ஓட்டுகள் அதிகரித்துள்ளன. தமிழகத்துக்கு பிரதமர் வருகை, தி.மு.க.,வுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் நடமாட்டத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள், செயல்படவில்லை என்பதை சுட்டி காட்டுகிறேன்.
போலீஸ் துறையினர் கட்டுப்படுத்த வேண்டிய சுதந்திரத்தை ஏன் அரசு வழங்க வில்லை என்பது கேள்விக்குறி. ராமேஸ்வரம் வழியே நடுக்கடலில் கடத்தப்பட்ட, 108 கோடி ரூபாய் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
த.மா.கா., வக்கீல்கள், சைக்கிள் சின்னம் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி வரும். மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை, தி.மு.க., அரசு முடக்காமல், சேலம் மாவட்டம் முழுதும் விளைநிலங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பாலம் கட்டுமானப்பணிகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும். காடையாம்பட்டி தாலுகாவுக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தை உடனே திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், நிர்வாகிகள் உலகநம்பி, செல்வம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

