டேங்க் ஆப்பரேட்டர் பற்றாக்குறை குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
டேங்க் ஆப்பரேட்டர் பற்றாக்குறை குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
ADDED : நவ 07, 2026 03:16 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்குள்ள நீருந்து நிலையம் மூன்று மூலம், 52 மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு காவிரி குடிநீர், 'பம்பிங்' செய்யப்படுகிறது.
தவிர ஆழ்துளை குழாய் கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த ஊராட்சியில், 52 தொட்டிகளில் இருந்து பகுதி வாரியாக தினமும் குடிநீர் திறந்து விடும் பணியில், 7 ஆப்பரேட்டர்கள் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் வினியோகம் செய்வதில் சிக்கல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் எந்த நேரம் குடிநீர் வரும் என, நாள் முழுக்க காத்திருந்து அவதிப்படுகின்றனர். தேவையான அளவு குடிநீர் இருந்தும், ஆப்பரேட்டர் பற்றாக்குறையால் வினியோகிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மூன்று தொட்டிக்கு ஒருவர் வீதம் தற்காலிக ஊழியர்களை, ஆப்பரேட்டர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
