ADDED : டிச 09, 2024 07:22 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழாவுக்கு, கடந்த, 17ல் கொடியேற்றம் நடந்தது. 24ல் தேர்களில் சிலைகளை எடுத்து வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது. பின் பேச்சு நடத்தி, டிச., 8ல் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலை, 6:00 மணிக்கு சேலம் ஆயர் ராயப்பன் தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சிலை எடுத்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிறிஸ்து அரசர் சிலையை, ஆலய பங்கு தந்தை பிரகாஷ் எடுத்து வைத்தார். மற்ற இரு சிலைகளை, மக்கள் எடுத்து வைத்தனர். பின் மின்னொளி அலங்காரத்தில் வடிவமைத்திருந்த தேரை, முக்கிய வீதிகள் வழியே திரளானோர் இழுத்துச்சென்றனர். ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.
சின்னப்பர் தேவாலயம்ஓமலுார் அருகே, ஆர்.சி.செட்டிப்பட்டி புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில், 133வது அமலோற்பவமாதா திருவிழா கடந்த நவ., 30ல் தொடங்கியது. நேற்று, சேலம் மறை மாவட்ட பேராயர் ராயப்பன் தலைமையில், 'வேண்டுதல் தேர்' திருப்பலி நடந்தது.
ஆலயத்தில் இருந்து முதலில் புறப்பட்ட சிறு தேரில், அந்தோனியார் சொரூபம், இரண்டாவது தேரில் செபஸ்தியார் சொரூபம், மூன்றாவது பெரிய தேரில் அமலோற்பவமாதா சொரூபத்துடன், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக இழுத்துச்சென்றனர். அதற்கு முன் ஏராளமானோர், கையில் மெழுகுவர்த்தி ஏந்திச்சென்றனர். இன்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.