/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் பின்னணி
/
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் பின்னணி
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் பின்னணி
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் பின்னணி
ADDED : ஆக 07, 2024 12:36 AM

இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் போலீசாரின், 'மாமூல் வசூல்' மோதல் தான் காரணம் என்ற 'திடுக்' தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் இடையே ஏற்பட்ட, 'மாமூல்' விவகாரம், குண்டு வீச்சு வரை கொண்டு சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் மண் அள்ளுதல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, சந்துக்கடையில் மது விற்பனை அதிகளவில் நடக்கின்றன.
இதில் ஒரு தரப்பு போலீசார், மண் எடுப்போரிடம் வசூல் செய்வதும், மற்றொரு தரப்பு போலீசார், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, சந்துக்கடைகளில் மது விற்பவர்களிடம் வசூல் செய்வது என, 'மாமூல்' மழையில் நனைகின்றனர்.
இந்த வசூலில் பங்கு போடுவதில் போலீசார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. போலீசார் ஒருவரை மாற்றி மற்றொருவர் மீது உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள், போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த, பிடிபட்ட குட்காவை விற்பனை செய்ததாக, இரு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அச்சம்பவத்துக்கு பின், ஒரு தரப்பு போலீசார் மீது பழி போடுவதற்கு, மற்றொரு தரப்பு தொடர்ந்து முயற்சித்து வருவதாக, போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனிடையே தான் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, பீர் பாட்டில் கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு பெட்ரோல் குண்டுகள், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது வீசப்பட்டன. ஒரு குண்டு எழுத்தர் அறை அருகேவும், மற்றொரு குண்டு இன்ஸ்பெக்டர் அறை முகப்பிலும் வீசப்பட்டுள்ளன. எழுத்தர் அறை அருகே வீசப்பட்ட குண்டு வெடித்து, அப்பகுதி தரை சேதம் அடைந்துள்ளது. மற்றொரு குண்டு வெடிக்காமல் பாட்டில் மட்டும் உடைந்து விழுந்து பெட்ரோல் சிதறியுள்ளது.
இதன் பின்னணியில் போலீசாரின் மாமூல் வசூல் மோதல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 'மாமூல் வசூல்' மோதல் தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரிக்க துவங்கியதால், அதில் இருந்து தப்பிக்கவும், விசாரணை அதிகாரிகளை திசை திருப்பவும், சில போலீசாரே, பழைய குற்றவாளிகளை துாண்டிவிட்டு குண்டு வீச செய்துள்ளதாக நேர்மையான போலீசார் ஆதங்கத்தைக் கொட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சேலம் எஸ்.பி., அருண்கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா உள்ளிட்டோர் விசாரித்தனர். இதனிடையே நேற்று மாலை, ஆதித்யா, 20, என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் தந்தை பிரபு மீது இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் மட்டும், 4 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், போலீசார் துாண்டுதலில்தான் குண்டு வீசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து சங்ககிரி டி.எஸ்.பி., ராஜாவிடம் கேட்டபோது, ''போலீசாருக்குள் மோதல் என்பது உண்மையில்லை. தற்போது பிடிபட்டுள்ள குற்றவாளி, போதையில் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக எஸ்.பி.,யிடமே கூறியுள்ளான்,'' என்றார்.
இதுகுறித்து, எஸ்.பி., அருண்கபிலன் கூறியதாவது:
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஸ்டேஷனில் எந்த பொருளும் சேதமடையவில்லை. 'சி.சி.டி.வி.,' கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில், 3 தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. சம்பவம் நடந்து, 10 மணி நேரத்தில், இடைப்பாடி, ஏரிச் சாலையை சேர்ந்த ஆதித்யா, 20, என்பவரை பிடித்துள்ளோம். அவர் பெயர் வெளியே பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கில், பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
=======
பாக்ஸ்
=======
'தி.மு.க., ஆட்சியில் சட்டம் -- ஒழுங்கு சீர் கெட்டுள்ளது'
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரவுடி, கூலிப்படை கும்பல் அதிகரித்து கொலை, கொள்ளை தொடர்ந்து வருகின்றன. விஷச் சாராயம், போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசியுள்ளனர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு எனில் போலீசில் புகார் செய்கிறோம். போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பற்ற நிலை என்றால் எங்கே போவது? மொத்தத்தில் மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.
இளங்கோவன்,
செயலர், அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்டம்
- நமது சிறப்பு நிருபர் -