/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வசிஷ்ட நதிக்கு நீர்வரத்தால் நிரம்பின தடுப்பணைகள்
/
வசிஷ்ட நதிக்கு நீர்வரத்தால் நிரம்பின தடுப்பணைகள்
ADDED : அக் 24, 2025 01:34 AM
ஆத்துார், ஆத்துார், கல்வராயன்மலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்வராயன்மலையில் இருந்து வரும் ஓடை, சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த நீர், வசிஷ்ட நதியில் கலக்கிறது. இதனால் அந்த நதியில், நேற்று காலை முதல், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பெத்தநாயக்கன்பாளையம், ராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின. மேலும் நரசிங்கபுரம் அணைமேடு தடுப்பணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வடமனேரிக்கு நீர்வரத்து
ஏற்காடு அடிவாரப்பகுதியில் பெய்த பலத்த மழையால், மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, டேனிஷ்பேட்டை, கோட்டைகுள்ளமுடையான், பண்ணப்பட்டி ஏரிகள் நிரம்பின. கடந்த இரு நாட்களாக பெய்த மழையால், நேற்று பண்ணப்பட்டி குட்டை நிரம்பி கோடி விழுந்து. இதனால், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பண்ணப்பட்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள கால்வாய் வழியே, கஞ்நாயக்கன்பட்டியில் உள்ள வடமனேரிக்கு நீர் செல்ல தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து ஏரிகள் நிரம்பியதால், அந்தந்த பகுதி விவசாயிகள் உழவு பணியை தொடங்கியுள்ளனர்.
சின்னேரி நிரம்பியது
கிழக்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காமலாபுரம் பெரிய ஏரி நிரம்பி, சின்னேரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால், நேற்று காலை, சின்னேரி நிரம்பி கோடி விழுந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உபரி நீர், ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டி, ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள பி.குட்டைக்கு செல்கிறது. அந்த குட்டை நிரம்பிய பின், கோட்டைமாரியம்மன் கோவில் அருகே செல்லும் சரபங்கா ஆற்றில் கலக்கும்.
மக்கள் அவதி
கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி குரும்பர் தெரு வழியே செல்லும், செந்தாரப்பட்டி பிரதான சாலையில் ஆங்காங்கே பள்ளம் இருப்பதோடு, அதில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியாக மாறியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முறையாக மழை நீர் வடிகால் அமைத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.
மின் மோட்டார் எங்கே?
மல்லுார் அருகே அம்மாபாளையம்- - பாரப்பட்டி செல்லும் ரயில் பாதைக்கு அடியில், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாரப்பட்டி, சந்தியூர், பசுவநத்தம்பட்டி, மூக்குத்திப்பாளையம் பகுதி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மக்கள், 5 கி.மீ., சுற்றி, மல்லுார், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.
மக்கள் கூறுகையில், 'சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார் இருந்தது. அதை காணவில்லை. இதனால் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேட்டூரில் கொட்டியது
சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக மேட்டூரில், 67.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று காலை வரை பதிவான மழை அளவு விபரம் வருமாறு:
மேட்டூர் - 67.4, கரியகோவில் - 35, ஆத்துார் - 32.6, இடைப்பாடி - 27.2, வாழப்பாடி- 22, ஏற்காடு - 21.2, சேலம் - 18.4, நத்தகரை - 17, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர் தலா, 14, ஆணைமடுவு - 12, ஓமலுார், டேனிஷ்பேட்டை தலா, 9, வீரகனுார் - 7, சங்ககிரி - 6.3, கெங்கவல்லி - 5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை
மேட்டூர், அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த, 3ல், 21 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து 4, 9ல், தலா, 4.8; 10ல், 0.5; 11ல், 78.6; 14ல், 12.8; 16ல், 16.8; 21ல், 10.6; நேற்று முன்தினம், 67.4 என, 20 நாட்களில், 217.3 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான நிலங்களில் ஈரப்பதம், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, விவசாயிகள், மக்களுக்கு மகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
நடவு பணி நிறுத்தம்
காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில், 25 ஏக்கரில் பல்வேறு ரக நெல் நடவு செய்யும் பணி முடிந்த நிலையில், கடந்த இரு நாட்களாக நடவு பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மழை குறைந்த பின் மீண்டும் நெல் நடவு பணியை தொடங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

