/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் ஓய்வெடுத்தது மழை; தென்பட்டது வெயில்
/
ஏற்காட்டில் ஓய்வெடுத்தது மழை; தென்பட்டது வெயில்
ADDED : அக் 24, 2025 01:32 AM
ஏற்காடு, ஏற்காட்டில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம் போல் ஓடியும், மரங்கள் சாய்ந்தும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டும், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல், இன்று வரை, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் வர அனுமதி இல்லை என அறிவுறுத்தியது. இதனால் சுற்றுலா பயணியர் இல்லாமல், ஏற்காடு வெறிச்சோடியது.
இந்நிலையில் தொடர் மழை நேற்று முன்தினம் நள்ளிரவு ஓய்ந்தது. ஆனாலும் நேற்று காலை, 11:00 மணி வரை, ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து கடுங்குளிர் நிலவியது. பின் பனிமூட்டம் விலகி, மதியம், 12:30 மணிக்கு மேல் வெயில் அடிக்க தொடங்கியது. மழை ஓய்ந்து வெயில் தென்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிலச்சரிவு சீரமைப்பு
ஏற்காட்டில் பெய்த மழையால், நேற்று முன்தினம் குப்பனுார் மலைப்பாதை, கொட்டச்சேடு மலைக்கிராமம் அடுத்து, சிறிது துாரத்தில் இருந்த சாலையோர தடுப்புச்சுவர் சரிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு நெடுஞ்சாலைத்துறையினர், நேற்று காலை எம்.சாண்ட் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.
அதேபோல் வாழப்பாடி, அதன் சுற்றுப்பகுதிகளில் இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், வீட்டில் முடங்கினர். ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான வெயில் அடித்தது. மழை இல்லாததால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கானல் நீர்
தாரமங்கலத்தில் நேற்று முன்தினம் வரை மழை பெய்த நிலையில், நேற்று காலை 10:00 மணி முதல், வானம் மேக மூட்டம் மற்றும் வெயிலும் மாறி மாறி தென்பட்டது. மதியம், 1:15 மணிக்கு திடீரென அடித்த அதிக வெயிலால், தாரமங்கலம் புறவழிச்சாலையில், 'கானல் நீர்' தென்பட்டது.

