/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வரும் சட்டசபை குழு 20க்குள் மனு அனுப்பலாம்
/
சேலம் வரும் சட்டசபை குழு 20க்குள் மனு அனுப்பலாம்
ADDED : டிச 08, 2024 12:59 AM
சேலம் வரும் சட்டசபை குழு
20க்குள் மனு அனுப்பலாம்
சேலம், டிச. 8-
தமிழக சட்டசபையின், 2024 - 25க்கான மனுக்கள் குழு, விரைவில் சேலம் மாவட்டத்தில் கூடுவதென முடிவெடுத்துள்ளது. அதனால், மாவட்டத்துக்கு உட்பட்ட தனிநபர்கள், சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியன, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னை, குறைகள் குறித்த மனுக்களை, தமிழில், 5 நகலாக தயாரித்து, கையெழுத்திட்டு, 'தலைவர், மனுக்கள் குழு, தமிழக சட்டசபை, சென்னை - 600 009' என்ற முகவரிக்கு வரும், 20க்குள் அனுப்ப வேண்டும்.
பல ஆண்டாக, அரசு அலுவலகத்தில் தீர்க்கப்படாத பொதுப்பிரச்னையாக இருக்கலாம். மனுவில் ஒரே பிரச்னையை உள்ளடக்கி, ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும். குறிப்பாக அந்த மனு, முக்கியத்துவம் வாய்ந்த பொருளை உள்ளடக்கியதாக இருப்பது அவசியம்.
தனி நபர் குறை, நீதிமன்றத்தில் நிலுவை, வேலை வாய்ப்பு, பட்டா, முதியோர் ஓய்வூதியம், அரசின் இலவச உதவிகள், வங்கி கடன், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல் போன்றவைகளாக இருக்கக்கூடாது. சட்டசபை விதிகளின் வரம்புக்கு உட்பட்ட மனுக்களை, அக்குழு மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.
ஒருவர் எத்தனை மனுக்கள் அனுப்பினாலும், முக்கியத்துவம் கருதி, ஒரு மனு மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்ட மனு தொடர்பாக, முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும். இத்தகவலை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.