/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் அனல்மின் நிலைய தொழிலாளி காயம்; சாம்பல் லாரிகளை சாலையோரம் நிறுத்த எதிர்ப்பு
/
விபத்தில் அனல்மின் நிலைய தொழிலாளி காயம்; சாம்பல் லாரிகளை சாலையோரம் நிறுத்த எதிர்ப்பு
விபத்தில் அனல்மின் நிலைய தொழிலாளி காயம்; சாம்பல் லாரிகளை சாலையோரம் நிறுத்த எதிர்ப்பு
விபத்தில் அனல்மின் நிலைய தொழிலாளி காயம்; சாம்பல் லாரிகளை சாலையோரம் நிறுத்த எதிர்ப்பு
ADDED : டிச 06, 2024 07:19 AM
மேட்டூர்: சாம்பல் லாரி மோதி, பைக்கில் சென்ற தொழிலாளி காயம் அடைந்தார். இதனால் லாரிகளை, சாலையோரம் நிறுத்த, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்ய, நிலக்கரி எரிக்கப்படும். எரித்த பின், அதன் சாம்பல், அருகே உள்ள ஏரியில் தேக்கி வைக்கப்படும். அதை ஈரம், உலர் சாம்பலாக லாரிகளில் ஏற்றி, சிமென்ட் ஆலைகளுக்கு கொண்டு செல்வர். அதற்கு லாரிகள், அனல்மின் நிலையம் அருகே மேட்டூர் - இடைப்பாடி நெடுஞ்சாலை இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், 600 மெகாவாட் அனல்மின் நிலைய ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியும், கோல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 25, நேற்று காலை, 9:00 மணிக்கு பைக்கில் சென்றபோது, சாம்பல் லாரி மோதியது. இதில் பைக் சேதமாகி கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்து, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
3 நாள் அவகாசம்
இதனால் லாரிகளை, சாலையோரம் நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து, 10:00 மணிக்கு, கோல்நாயக்கன்பட்டி மக்கள், சங்கிலி முனியப்பன் கோவில் அருகே, சாம்பல் ஏற்றச்செல்லும் லாரிகளை நிறுத்தினர். இதையடுத்து, 840 மெகாவாட் அனல்மின் நிலைய செயற்பொறியாளர் நடராஜன், கருமலைக்கூடல் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, கோபாலகிருஷ்ணன் சிகிச்சை, பைக் பழுதுபார்ப்பு செலவை ஏற்பதாக, லாரி உரிமையாளர் ஒப்புக்கொண்டார். பின் இன்ஸ்பெக்டர், '3 நாட்கள் மட்டும் லாரிகளை சாலையோரம் நிறுத்தலாம். பின் நிறுத்தும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, லாரி உரிமையாளர்களை எச்சரித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.