ADDED : டிச 27, 2024 01:17 AM
பெருமாளுக்கு தோமாலை சேவை
சேலம், டிச. 27-
மார்கழி ஏகாதசியையொட்டி, சேலம், கோரிமேடு அருகே பெரிய கொல்லப்பட்டி வெங்கடேச பெருமாள் கோவிலில், தோமாலை சேவை வைபவம் நேற்று நடந்தது. அதிகாலை ேஹாமம் செய்யப்பட்டு, கோ பூஜை நடந்தது. மூலவர் பெருமாளுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாளுக்கும் அபிேஷகம் நடந்தது. பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது.ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, ஏலக்காய், வாழைப்பழம் உள்பட, 50 வகை பழங்களால் மாலைகள் தொடுக்கப்பட்டன. மல்லி, சாமந்தி, சன்னமல்லி, சம்பங்கி, குண்டுமல்லி, அரளி உள்ளிட்ட ஏராளமான பூக்களால், மாலைகள் தொடுக்கப்பட்டு, பழ, பூ மாலைகளை, பட்டாச்சாரியார் கோவில் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்து, மூலவருக்கு தோமாலை சேவையை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பெருமாளுக்கு சாத்தப்பட்ட பழங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன.