ADDED : செப் 09, 2025 01:47 AM
சேலம், சேலம் பனமரத்துப்பட்டி அருகே, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த இ.கம்யூ., பிரமுகர் தன்ராஜ், 65. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த இவர், திடீரென தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து முதலுதவி அளித்தனர்.
அதன்பின் அவர் கூறுகையில்,'' பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் எனக்கு, 900 சதுரடி நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்க முடிவெடுத்து, தாசநாயக்கன்பட்டி அவென்யூ பகுதியில் வசிக்கும், ரயில்வே ஊழியர் சந்திரசேகரனிடம், 1.70 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, நிலத்தின் பத்திரத்தை கொடுத்து விட்டேன். ஓராண்டாகியும் நிலத்தை கிரயம் செய்யவில்லை. பத்திரத்தையும் திருப்பி தராமல், ஏமாற்றும் நோக்கில் போக்குகாட்டி வருகிறார். அதனால், நிலுவைப்பணம் அல்லது பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்,''
என்றார்.
* காடையாம்பட்டி அடுத்த கொங்குபட்டியை சேர்ந்த தம்பதி பரமேஷ் - சின்னம்மா. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த இவர்கள், தங்கள் மீது டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார் தடுத்து மீட்டதும், பரமேஷ் கூறியதாவது:
எங்கள் வீட்டருகே உள்ள, புறம்போக்கு நிலம் வழித்தடத்தை பயன்படுத்துவது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த முருகேசன், சித்தன் ஆகியோருடன் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. அதன் காரணமாக, எங்களுடைய குடிநீர் இணைப்பை அத்துமீறி, முருகேசன் துண்டித்து விட்டார். அதை தட்டிகேட்ட எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அந்த மனவேதனையில் தீக்குளிக்க முயன்றோம்.
இவ்வாறு கூறினார்.
கொங்குபட்டி ஊராட்சி செயலர் கதிர்வேல் கூறுகையில், ''முருகேசன் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டதால், ஊராட்சியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அதனால், இருவரின் இணைப்பை துண்டித்து, ஊருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இனி, இருவரும் சமாதானமாகி வந்தால் மட்டுமே, அவர்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கும்,'' என்றார்.