/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று தைப்பொங்கல் பண்டிகை: பானை, கரும்பு, மஞ்சக்கொத்து வாங்க அலைமோதிய மக்கள்
/
இன்று தைப்பொங்கல் பண்டிகை: பானை, கரும்பு, மஞ்சக்கொத்து வாங்க அலைமோதிய மக்கள்
இன்று தைப்பொங்கல் பண்டிகை: பானை, கரும்பு, மஞ்சக்கொத்து வாங்க அலைமோதிய மக்கள்
இன்று தைப்பொங்கல் பண்டிகை: பானை, கரும்பு, மஞ்சக்கொத்து வாங்க அலைமோதிய மக்கள்
ADDED : ஜன 15, 2024 10:19 AM
சேலம்: இன்று பொங்கல் வைத்து கொண்டாட, பானை, கரும்பு, மஞ்சக்கொத்து உள்ளிட்டவற்றை வாங்க நேற்று சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அலைமோதினர்.
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனால் கரும்பு, மஞ்சக்கொத்து, பானை, பூக்கள் ஆகியவற்றின் இறுதி கட்ட வியாபாரம் நேற்று சேலம் மாநகர், மாவட்டத்தில் மும்முரமாக நடந்தது. குறிப்பாக சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, 4 ரோடு, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கரும்புகள் குவிக்கப்பட்டிருந்தன.
ஒரு ஜோடி கரும்புகளை, 80 முதல், 150 ரூபாய் வரை கொடுத்து மக்கள் வாங்கி சென்றனர். மஞ்சக்கொத்து, 50 முதல், 100 ரூபாய், காப்பு கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனையானது. பலர், கடைகளில் மண் பானைகளை வாங்கிச்சென்றனர். பூஜைக்கு தேவையான பொருள் விற்பனை களைகட்டியது.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் உள்ள மார்க்கெட்டில் நேற்று முன்தினத்தை விட நேற்று பூக்கள் விலை உயர்ந்தது. தலா, 2,000 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லி, முல்லை, 2,400 ரூபாயாக உயர்ந்தது.
மற்றவற்றில் பெரிய அளவில் விலை உயரவில்லை. ஜாதிமல்லி, காக்கட்டான் கிலோ தலா, 1,200, கலர் காக்கட்டான், மலைக்காக்கட்டான் தலா, 1,000, அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி தலா, 140, செவ்வரளி, 200, ஐ.செவ்வரளி, 160, நந்தியாவட்டம், 150, சி.நந்திவட்டம், 200, சம்பங்கி, 120, சாதா சம்பங்கி, 150 ரூபாய்க்கு விற்பனையானது. பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், நகை கடைகளிலும் மக்கள் திரண்டனர். அங்கும் வழக்கத்தைவிட விற்பனை அமோகமாக நடந்தது.
காடையாம்பட்டி தாலுகா சந்தைப்பேட்டையில் கூடிய காய்கறி சந்தையில் பானை விற்பனை அமோகமாக நடந்தது. 200 முதல், அளவுக்கேற்ப பானைகள் விற்கப்பட்டன. நாளை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பலர் மாடுகளுக்கு வண்ண கயிறுகள், வண்ணப்பொடிகளை வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கயிறு, சங்கிலி விற்பனை
நாளை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் சந்தைப்பேட்டையில் மாடுகளை அலங்கரிக்க தேவையான வண்ண கயிறுகள், சங்கிலிகள், கழுத்து நெற்றி மணி, சங்கு, குஞ்சங்கள், சாட்டை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது. 30 முதல், 300 ரூபாய் மதிப்பில் அலங்கார பொருட்களை, கால்நடை உரிமையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
11 உழவர் சந்தைகளில் ரூ.1.61 கோடிக்கு விற்பனை
சேலம் மாவட்டத்தில், 11 உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இன்று பொங்கல் பண்டிகையால் போகி பண்டிகையான நேற்று காலை, 5:00 மணி முதல், உழவர் சந்தைகளில் விற்பனை களைகட்டியது.
குறிப்பாக தேங்காய், பழம், வாழை இலை உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகளவில் நடந்தது. கரும்பு, 27 டன் விற்பனையானது. மொத்தம், 378 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1,61,33,740 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதில் அதிகபட்சம் சூரமங்கலம் உழவர் சந்தையில், 36.28 லட்சம் ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஆட்டையாம்பட்டி உழவர் சந்தையில், 3.39 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை
நடந்தது.
தக்காளி விலையில் முறைகேடு?
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை, புறநகரில் இளம்பிள்ளை உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனையானது. மற்ற உழவர் சந்தைகளில், 22 ரூபாய்க்கு
விற்பனையானது.
இரு சந்தைகளில் மட்டும் கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்பட்டதாக, நுகர்வோர் தெரிவித்தனர். தாதகாப்பட்டியில், 3,050 கிலோ தக்காளிக்கு, கூடுதல் விலை மூலம், 9,150 ரூபாய், இளம்பிள்ளையில், 925 கிலோவுக்கு, 2,775 ரூபாய் என, கூடுதல் வருமானம் பார்த்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க நுகர்வோர் வலியுறுத்தினர்.