/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று சி.எஸ்.ஐ., ஆலய 150ம் ஆண்டு நிறைவு விழா
/
இன்று சி.எஸ்.ஐ., ஆலய 150ம் ஆண்டு நிறைவு விழா
ADDED : அக் 26, 2025 01:13 AM
சேலத்தில் இன்று நடக்கும் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலய, 150வது ஆண்டு நிறைவு விழாவில், அமைச்சர்கள் கீதாஜீவன், ராஜேந்திரன் பங்கேற்கின்றனர்.
சேலம் நகரின் மையப்
பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம், 1875ல் கட்டப்பட்டது. அதன், 150ம் ஆண்டு நிறைவு விழா, இன்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு ஆராதனையுடன் தொடங்குகிறது. 11:30 மணிக்கு, சேலம் திருமண்டலம் ஈரோடு பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், திருநெல்வேலி திருமண்டலம் பிஷப் பர்ணபாஸ் முன்னிலையில், நினைவு துாண் திறக்கப்படுகிறது. வேலுார் திருமண்டலம் பிஷப் சர்மா நித்தியானந்தன், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சி பிஷப் சந்திரசேகரன் பங்கேற்கின்றனர்.
மதியம், 12:00 மணிக்கு, 150வது ஆண்டு சிறப்பு மலரை, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட, சேலம் கிருபா மருத்துவமனை மருத்துவர் கிருபா பெற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து ஆலய ஆராதனை முறைமைகள் புத்தகத்தை, பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் வெளியிட, சேலம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம், சபை தலைவர் ஜவஹர் வில்சன் ஆசிர் டேவிட் பெற்றுக்கொள்கிறார். இரவு, 7:00 மணிக்கு நடக்கும் பொது வரவேற்பு நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன், சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை கிறிஸ்துநாதர் ஆலய சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
ஆலயமும் திருச்சபையும்
சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள, சி.எஸ்.ஐ., ஆலயம், ஆங்கில மற்றும் தமிழ் திருச்சபையாரின் ஒற்றுமை, சுக வாழ்வுக்கு சாட்சியான மாதிரி, சில குடும்பத்தினர், 5-ம் தலைமுறையாக, சில குடும்பத்தினர், 4-வது தலைமுறையாக தொடர்ந்து, ஆலயத்தில் ஆராதித்து வருவது, ஆலய பாரம்பரிய சிறப்புக்கு சான்று.
ஆலயத்தின் சிவப்பு சிலுவை விளக்கு, கோபுர உச்சியில் ஒளி வீசி, இருளின் மத்தியில் ஆண்டவரின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்தும் நம்பிக்கை ஒளிச்சுடர். பாவச்சுமையால் வருந்தும் ஆன்மாக்களுக்கு ஆறுதலை தரும் கலங்கரை விளக்கம்.
கிறிஸ்துநாதர் ஆலய வளாக நுழைவாயிலுக்குள் வரும் விசுவாசியே... உம் மேல் ஆண்டவர் தரும் உலகம் தராத சமாதானமும், அன்புறவும் நிலைப்பதாக வாழ்த்துகிறோம்.
இந்த தெய்வீக அனுபவத்தில் பங்கு கொள்ள உம்மை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.

