/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
/
தமிழகத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
ADDED : பிப் 15, 2025 01:20 AM

சேலம்:தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தக்காளி விளைச்சலுக்கான பருவநிலை நன்றாக உள்ளது. காலையில் பனி, மதியம் நல்ல வெயில் அடிக்கிறது.
பனியால் ஈரப்பதம், வெயிலால் பூக்களில் மகரந்த சேர்க்கை நன்றாக இருக்கும். பூக்கள் உதிராமல், நோய் தாக்கமும் இல்லாமல் விளைச்சல் அதிகமாக இருக்கிறது.
தக்காளி சீசன் ஜனவரி கடைசியில் துவங்கியது, மார்ச் மாதம் வரை இருக்கும். தற்போது விளைச்சல் அதிகரிப்பால், மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து, 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் கிலோ தக்காளி, 60 -- 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 10 முதல் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் சரிவடைந்து, கிலோ 5 -- 10 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ''தமிழகத்தில் ஆங்காங்கே தக்காளி விளைச்சல் உள்ளதால், அதன் அருகிலேயே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை குறைந்துள்ளது,'' என்றார்.