ADDED : டிச 18, 2024 07:12 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை சார்பில், நாய்க்கன்பட்டி, இளம்பிள்ளை பகுதி தொகுப்பு விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
அதில், உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து பேசியதாவது: பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2023-2024ம் ஆண்டுக்கு நாய்க்கன்பட்டி, இளம்பிள்ளை, சென்னகிரி பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்யும் தொகுப்பு விவசாயிகளை ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அங்கக வேளாண்மையில் வயல்கள் அருகில் கிடைக்கும் கால்நடை சாணம், பிற கழிவுப்பொருட்களை பதப்படுத்தி நெல், சோளம், துவரை, தட்டை, கொள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கும், தென்னை போன்ற மரப்பயிர்களுக்கும் உரமாக இடலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விதை சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன், அங்கக சான்று பெறும் வழிகள், மண்புழு உரம் தயாரிப்பு, அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தார். துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பயிர்களுக்கு ஊட்டமளிக்க தக்கை பூண்டு, சணப்பை உள்ளிட்ட பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு அவை பூப்பதற்கு முன் நிலத்திலேயே மடக்கி உழுது உரமாக்கும் முறைகள் குறித்து தெரிவித்தார்.தொடர்ந்து சீமை, அகத்தி, ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கு, பார்த்தீனியம், பூவரசு உள்ளிட்ட செடிகள், பசுந்தழைகளை நிலத்தில் போட்டு மட்க வைத்து உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.