UPDATED : அக் 28, 2026 07:13 AM
ADDED : அக் 28, 2026 02:43 AM

சேலம், ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், 15க்கும் மேற்பட்ட வழிப்பறி, அடிதடி, கொலை வழக்குகளில் தொடர்புடைய, 'ஏ' கிரேடு குற்றவாளிகளான ஆண்டிப்பட்டியை சேர்ந்த பிரபு, 33, சந்தோஷ் குமார், 34, முத்தனம்பாளையத்தை சேர்ந்த தேவராஜ், 34, ஆகிய மூவரை, நேற்று ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.
ஸ்டேஷன் போலீசார் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்கு சென்ற நிலையில், குறைந்த போலீசார் மட்டுமே பணியில் இருந்தனர். ரவுடிகளிடம் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மாலை ஜீப்பில் ஏற்றிச்செல்ல முயன்றனர்.
அப்போது, பிரபு, சந்தோஷ் குமார் ஆகியோர் கழிப்பறை செல்ல வேண்டும் என கூறியதால், ஸ்டேஷன் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு செல்ல அனுமதித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும், ஸ்டேஷன் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி ஓடினர். உஷாரான போலீசார், தேவராஜை பாதுகாப்பாக வைத்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
தேனி சிறையில் கைதிகள் தப்பிய நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இரு கைதிகள் தப்பியது, சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
