/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
/
துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
ADDED : ஜன 05, 2024 10:23 AM
ஓமலுார்: பெரியார் பல்கலை துணைவேந்தர் விவகாரத்தில், 'சம்மன்' அனுப்பப்பட்ட, 5 பேரிடம், தனிப்படை போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில், அரசு அனுமதியின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' தொடங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல்(பொ), கணினி இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வந்தார்.
இதுதொடர்பாக கருப்பூர் போலீசார், பல்கலையில் பணிபுரியும் உளவியல் துறையை சேர்ந்த முனைவர் ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ஜெயராமன், மேலாண் கல்வி துறை பேராசிரியர் சுப்ரமணியபாரதி, விலங்கியல் துறையை சேர்ந்த முனைவர் நரேஷ்குமார், தொகுப்பூதிய பணியாளர் தண்டீஸ்வரன் ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர்.
நேற்று சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், 5 பேரும் ஆஜராகினர். அவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் தனிப்படை போலீசார், ஒவ்வொருவரிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 'பூட்டர் பவுண்டேஷன்' குறித்து, 30க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பினர். அவரவர் தெரிவித்த பதில்களை, பதிவு செய்து கொண்டனர். காலை, 10:00 மணிக்கு தொடங்கிய விசாரணை, மதியம், 2:00 மணிக்கு முடிந்தது. இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், 5 பேர் அளித்த வாக்குமூலப்படி, 'பூட்டர் பவுண்டேஷன்' தொடர்புடைய, 8 நிறுவனத்தினர் ஆஜராகி விளக்கம் அளிக்க, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
2ம் முறை கையெழுத்து
துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த டிச., 26ல் கைது செய்யப்பட்டு, சேலம் ஜே.எம். எண்: 2 நீதிபதி தினேஷ்குமாரன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். ஒரு வாரத்துக்கு தினமும் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; 8ம் நாளில் நீதிபதி முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, 27ல் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட்ட ஜெகநாதன், பின் நெஞ்சுவலியால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை சீரான நிலையில் நேற்று காலை ஜெகநாதன், உதவி கமிஷனர் அலுவலகத்தில், 2ம் முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார்.