/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மாமூல்' கொடுத்து சாராயம் விற்பதாக வீடியோ 'வைரல்': தி.மு.க., நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது
/
'மாமூல்' கொடுத்து சாராயம் விற்பதாக வீடியோ 'வைரல்': தி.மு.க., நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது
'மாமூல்' கொடுத்து சாராயம் விற்பதாக வீடியோ 'வைரல்': தி.மு.க., நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது
'மாமூல்' கொடுத்து சாராயம் விற்பதாக வீடியோ 'வைரல்': தி.மு.க., நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது
ADDED : பிப் 05, 2025 07:22 AM
ஆத்துார்: போலீசாருக்கு, 'மாமூல்' கொடுத்து டாஸ்மாக் கடை எதிரே, சாராய பாக்கெட் விற்பதாக வீடியோ பரவிய நிலையில், தி.மு.க., நிர்வாகிகள் உள்பட, 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார், வளையமாதேவி பிரிவு சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை திறக்கும் முன், நேற்று காலை, 9:00 மணிக்கு, அதன் எதிரே உள்ள இடத்தில் சாராயம் விற்பனை நடந்தது. இதை பார்த்த, 2 பேர் வீடியோ எடுத்தனர். வீடியோவில், கடையில் இருந்தவர்கள், 'தி.மு.க.,வை சேர்ந்த, கல்லாநத்தம் ஜோதிவேல், பாலு தான் கடை வைத்துள்ளனர். போலீசாருக்கு, 'மாமூல்' கொடுத்துவிட்டு தான், கடை நடத்துகிறோம். உங்களுக்கு தேவையானதை கொடுக்கிறோம்' என்றனர். இந்த வீடியோ வைரலானது.
இதை அறிந்து, கூடுதல் எஸ்.பி., பாலகுமார் தலைமையில் ஆத்துார் ஊரகம், மதுவிலக்கு போலீசார் விரைந்தனர். அங்கு, டாஸ்மாக் எதிரே கடை திறப்புக்கு முன் சாராயம் விற்பது தெரிந்தது. அங்கிருந்த சாராய பாக்கெட், சில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல், 50, சுரேஷ், 45, ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் கல்லாநத்தம் ஊராட்சி வைத்தியநாதபுரத்தை சேர்ந்த, தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் ஜோதிவேல், 45, தி.மு.க.,வை சேர்ந்த ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு கவுன்சிலர் கங்கையம்மாளின் கணவரும், அந்த வார்டு செயலரும், பெரியமாரியம்மன் கோவில் அறங்காவலருமான ரவி, 48, ஆகியோரை, ஆத்துார் ஊரக போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தி.மு.க., 26வது வார்டு செயலர் இளங்கோ மன்னனை தேடுகின்றனர்.இதுகுறித்து சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் கூறுகையில், 'சாராய பாக்கெட் விற்பதாக வீடியோ வந்ததும், தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் பார் நடத்திய ஜோதிவேல் மற்றும் ரவியை கைது செய்துள்ளோம். எங்கிருந்து சாராயம் வாங்கினர் என, விசாரணை நடக்கிறது,'' என்றார்.
திடீர் திருப்பம்
பாரில், தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு செயலர் ரவி, ஆத்துார், 26வது வார்டு செயலர் இளங்கோமன்னன், வளையமாதேவி வினோத், ஆத்துார் சரண் ஆகியோர், சாக்கு மூட்டையில், 6 பாக்கெட் கொண்ட விஷ நெடியுடன் கூடிய, 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை வைத்து, மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதாக, ஆத்துார் ஊரக போலீசார், 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அதில் ரவியை கைது செய்து, மற்றவர்களை தேடுகின்றனர்.