ADDED : டிச 09, 2024 07:22 AM
சேலம்: ''சினிமாவில் நடிப்பதை போன்று விஜய் அரசியலிலும் நடிக்கிறார்,'' என, கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் பேசினார்.
சேலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில் அக்கட்சி பொதுச்செயலரான, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசியதாவது:தற்போதைய அரசியல், விளம்பரம், வியாபாரம், விமர்சன அரசியலாக உள்ளதே தவிர, மக்களின் வளர்ச்சி சார்ந்ததாக இல்லை. த.வெ.க., தலைவர் விஜய், 50 பேரை அழைத்து வெள்ள நிவாரணம் கொடுத்தது 'சூட்டிங்' இல்லை. ஆனால் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்கினால் 'போட்டோ சூட்' என்கிறார். அதனால் விஜய் சொல்வது அத்தனையும் பொய். சினிமாவில் நடிப்பதை போன்று, அரசியலிலும் நடிக்கிறார்.
அவர் நடிப்பது மட்டுமின்றி, அவரை சார்ந்தவர்களையும் நடிக்க வைக்கிறார். அதனால் மக்கள் ஏமாறக்கூடாது. மக்கள் நம்பும்படி பொய் பரப்பப்படுவதால், அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். இயக்குனர் சந்திரசேகர் மகன் என்பதற்காகவே, விஜய்க்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பெயர் வாரிசு இல்லையா? ஆனால் அவர் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். அதிகாரத்தில் பங்கு என்பது நமக்கான திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்புதான். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கொ.ம.தே.க., மாவட்ட செயலர்கள் லோகநாதன், ரமேஷ், ரத்தினவேல், மாநில இளைஞரணி செயலர் சூர்யமூர்த்தி, வர்த்தக அணி செயலர் சண்முகம், மண்டல இளைஞரணி செயலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.