/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விரலி, பனங்காலி ரக மஞ்சள் விலை சரிவு
/
விரலி, பனங்காலி ரக மஞ்சள் விலை சரிவு
ADDED : மே 04, 2024 10:09 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 4,640 மூட்டை(2,698.32 குவிண்டால்) மஞ்சளை கொண்டு வந்தனர். சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதி வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர்.
குவிண்டால் விரலி ரகம், 16,989 முதல், 21,233 ரூபாய்; உருண்டை ரகம், 15,669 முதல், 18,699 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்), 22,589 முதல், 28,669 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 4.78 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த, 25ல் நடந்த ஏலத்தைவிட விட, நேற்று நடந்த ஏலத்தின்போது, 2,224 மஞ்சள் மூட்டைகள் வரத்து அதிகரித்திருந்தது. மேலும் குவிண்டாலுக்கு விரலி ரகம், 990 ரூபாய், பனங்காலி, 1,376 ரூபாய் குறைந்தது. உருண்டை ரகம், 540 ரூபாய் விலை உயர்ந்தது.
ரயிலில் இருந்து விழுந்த சென்னை வாலிபர் சாவு
சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் காகங்கரை - சாமல்பட்டி ஸ்டேஷன்கள் இடையே, நேற்று முன்தினம், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இறந்து கிடந்தவர், சென்னை, சாலிகிராமம், விஜயராவகபுரம், 5வது தெருவை சேர்ந்த விக்னேஷ், 26. பெயின்டரான அவர், கடந்த 1, இரவு கோவை செல்வதற்கு, தன்பாத் - ஆலப்புழா ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் பயணித்தார். ஆனால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அவர், தலையில் அடிபட்டு இறந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
11ல் சற்குரு பிறந்தநாள் அன்னமளிப்பு விழா
சேலம்: சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், சற்குரு, 165வது பிறந்தநாள் விழா, அன்னமளிப்பு விழா வரும், 11ல் நடக்க உள்ளது.
அன்று காலை, 4:30 மணி முதல், திருவிளக்கு பூஜை, புனிதநீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, சற்குரு சுவாமிகளின் வேள்வி, பேரொளி வழிபாடு, ஞான விநாயகர், ஞான முருகர், சற்குரு சுவாமிக்கு மகா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை முடிந்து, 12:30 மணிக்கு அன்னமளிப்பு விழா நடக்கும்.
66 பேர் ரத்த தானம்
ஆத்துார்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஆத்துார் மிட்டவுன் ரோட்டரி கிளப், ஆத்துார் வட்டார இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கம் சார்பில் ரத்த தானம் முகாம் ஆத்துாரில் நேற்று நடந்தது.
ரோட்டரி மிட்டவுன் தலைவர் ஜோசப்தளியத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், 44 பேர், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்தனர். அதேபோல் ஆத்துார் ஆர்ய வைஸ்ய இளைஞர் சங்கம், ஆத்துார் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய, ரத்த தான முகாமில், 22 பேர், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர்.
இது குறித்து ஜோசப்தளியத் கூறுகையில், ''18 முதல், 60 வயது வரை உள்ளவர்கள், 60 கிலோவுக்கு மேல் இருந்தால், 450 மி.லி., வரை ரத்த தானம் செய்யலாம். ஆண்கள், 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம் வழங்கலாம். அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் ரத்தம், கர்ப்பிணியர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் உயிரை காப்பாற்ற உதவுகிறது' என்றார்.