ADDED : ஜன 25, 2024 09:50 AM
சேலம்: தேசிய வாக்காளர் தினம், இன்று கொண்டாடப்படுகிறது. அதன்மூலம், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்துவதுடன், ஓட்டு இயந்திர செயல்பாடு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி, நேற்று ஏற்று கொள்ளப்பட்டது.
வாக்காளர் தின உறுதிமொழியான, 'மக்களாட்சி மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபு, சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் மாண்பை நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், ஜாதி, வகுப்பு மொழி ஆகிய தாக்கத்துக்கு ஆட்படாமல், எந்தவித துாண்டுதல் இன்றி வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று கொண்டனர். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி துவங்கியது. மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி கொடியசைத்து துவக்கி வைத்து மாணவ, மாணவியருடன் சேர்ந்து வாக்காளர் உறுதி மொழி ஏற்றார். பின்பு பேரணி மேட்டூர் அனல்மின் நிலைய சாலை, துாக்கனாம்பட்டி வழியாக சென்று சதுரங்காடியில் நிறைவடைந்தது.
தாசில்தார் விஜி, நகராட்சி ஆணையாளர் நித்யா, கல்லுாரி முதல்வர் ரேணுகாதேவி, கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.