/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்வி, தமிழ், இலக்கியத்தால் தலை நிமிர்ந்துள்ளோம்
/
கல்வி, தமிழ், இலக்கியத்தால் தலை நிமிர்ந்துள்ளோம்
ADDED : ஜன 22, 2024 10:41 AM
சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி மாநாட்டில், சிறப்பு தலைப்புகளில், தி.மு.க.,வின் பிரபலங்கள் பேசினர். அதன் விபரம்:
'திராவிடம் சொல்லும் மனிதநேயம்' தலைப்பில் அருள்மொழி: 1967ல் வலிமையான வேட்பாளர்களை களமிறக்கிய அண்ணாதுரை, துணிச்சலாக தேர்தலை எதிர்கொண்டதால் தான், பச்சை தமிழரான காமராஜர் தோற்றுப்போனார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கல்லுாரி மாணவரை, மக்கள் வெற்றிபெறச்செய்தனர்.
'இலக்கியமும், தி.மு.க.,வும்' தலைப்பில் மனுஷ்யபுத்திரன்: தமிழ், தமிழர்களின் அடையாளமாக தமிழகம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமஸ்கிருதம் கலந்த தமிழ் என்ற நிலையை கருணாநிதி மாற்றியதால்தான் இன்று நாம் நல்ல தமிழை பேசுகிறோம். புத்தக வாசிப்பு, இப்போது இயக்கமாக மாறிவிட்டது. கல்வி, தமிழ், இலக்கியத்தால் நாம் தலை நிமிர்ந்துள்ளோம். தமிழகமும் தலை நிமிர்ந்துள்ளது.
'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' தலைப்பில் சுப.வீரபாண்டியன்: மாநில சுயாட்சி கேட்டு முதல்முறை தமிழகத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமத்துவம் தேவையெனில் அதற்கு மாநில சுயாட்சி தேவை. இன்னும், 3 - 4 மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில், பா.ஜ., ஆட்சியை நீக்கிவிட்டு மாநில சுயாட்சியை கொண்டு வர வேண்டும்.
'திருநர் வாழ்வில் திராவிட அரசு' தலைப்பில் திருநங்கை முனைவர் ரியா: நாம் பிறந்த குடும்பங்களில் கூட ஒதுக்கிய சமூகத்தில், 'திருநங்கை' என பெயரிட்டு, அவர்களுக்கு நலவாரியம் அமைத்து, உதவித்தொகை, கடன் தொகை வழங்க திட்டம் வகுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
'மருத்துவ கட்டமைப்பு - இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு' தலைப்பில், எம்.எல்.ஏ., எழிலன் நாகநாதன்: குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர, மற்றவர்கள் மருத்துவம் படிக்க இயலாது என்ற நிலையை மாற்றி, பிற்படுத்தப்பட்டோர் என, அத்தனை தரப்பினருக்கும் இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கி மருத்துவராக்கியது கருணாநிதி. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லுாரி, பல ஆயிரம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் என முழு கட்டமைப்பை கொண்ட தமிழகத்தில், ஒரு 'எய்ம்ஸ்' மருத்துவமனையை கூட பல ஆண்டாக கட்ட முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில்வேல்: இந்த மாநாடு ஏன் சேலத்தில் நடத்த திட்டமிட்டார்கள் என பலரும் கேட்கின்றனர். 1971ல் சேலத்தில் தான், ஈ.வெ.ரா., முன்னிலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி அப்போது நடந்த தேர்தலில், 184 சீட்டுகளை, தி.மு.க., பிடித்து சாதனை படைத்தது.
அதுபோல், ஈ.வெ.ரா.,வின் பேரனான உதயநிதி தலைமையில் இங்கு மாநாடு நடத்தி, வர உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட, 40 தொகுதிகளை மட்டுமின்றி, தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பா.ஜ., அரசை துாக்கி வீசக்கூடிய மாநாடாக அமைய வேண்டும் என்பதற்காகவே சேலத்தில் நடத்தப்பட்டது.