/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காணும் பொங்கலையொட்டி களைகட்டிய எருதாட்டம்
/
காணும் பொங்கலையொட்டி களைகட்டிய எருதாட்டம்
ADDED : ஜன 18, 2024 10:19 AM
சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓமலுார், எம்.செட்டிப்பட்டியில் நேற்று எருதாட்டம் நடந்தது. 20 காளைகளை அழைத்து வந்தனர். முன்னதாக ஊர் முக்கிய பிரமுகர்கள், மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, முதலில் கோவில் மாட்டை, கோவிலை சுற்றி அழைத்து வந்தனர்.
தொடர்ந்து, எம்.செட்டிப்பட்டியில் வளர்க்கப்படும் காளைகள் அழைத்து வரப்பட்டன. இதையடுத்து குடை உள்ளிட்டவற்றை காளைகளிடம் காட்டி மிரளவிட்டு விளையாடினர். கூடி நின்று ஏராளமானார் வேடிக்கை பார்த்தனர்.
தாரமங்கலம் அருகே
அமரகுந்தி மாரியம்மன் கோவில் மைதானத்தில் எருதாட்டம் நடந்தது. இதற்கு அங்குள்ள முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து கோவில் மாடுகளுக்கு பூஜை செய்தனர். மதியம், கோவில் மாடுகளை இளைஞர்கள் ஓட்டிச்சென்றனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட காளைகள் மூலம் எருதாட்டம் நடந்தது. அங்கு பாதுகாப்புக்கு இருபுறமும் தட்டிகள் அமைத்து, தொளசம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொளத்துார், காவிரி கரையோரம் உள்ள கோல்நாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் இளைஞர்கள் கயிற்றில் மாட்டை கட்டி கோவிலை சுற்றி ஓட்டி சென்றனர்.
இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் பூசாரிகள் பூஜை செய்து எருதாட்டத்தை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 36 கிராமங்களை சேர்ந்த எருதுகளை கோவிலை சுற்றி ஓடவிட்டு மக்கள் எருதாட்டம் நடத்தினர்.
பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டியில் நடந்த எருதாட்டத்தில், ஒவ்வொரு மாடுகளின் இருபுறமம் கயிறு கட்டி இழுத்து வந்தனர். மாடுகளை கோபமூட்டி ஆட்டம் காட்டினர். கொம்புகளை ஆட்டி, சீறி பாய்ந்த மாடுகளின் கயிறுகளை பிடித்து இழுத்து அடக்கினர். எருதாட்டத்தை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். நாழிக்கல்பட்டி, கோணமடுவு, ஜல்லுாத்துப்பட்டி, நுாலாத்துகோம்பை, சாமகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் எருதாட்டம் நடந்தது.