/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 4 வரை மழை பெய்ய வாய்ப்பு விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
/
வரும் 4 வரை மழை பெய்ய வாய்ப்பு விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
வரும் 4 வரை மழை பெய்ய வாய்ப்பு விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
வரும் 4 வரை மழை பெய்ய வாய்ப்பு விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
ADDED : டிச 01, 2024 01:10 AM
வரும் 4 வரை மழை பெய்ய வாய்ப்பு
விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
பனமரத்துப்பட்டி, டிச. 1-
வரும், 4 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டியது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:
சேலம் மாவட்டத்தில், டிச., 1 முதல், 4 வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் பல இடங்களில் கன முதல், மிக கன மழை எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் இருந்து, மணிக்கு, 6 முதல், 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். காற்றின் ஈரப்பதம், 60 முதல், -100 சதவீதமாக நிலவும். தொடர் மழையால் விவசாயிகள், பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மரவள்ளி, சின்னவெங்காயம், மஞ்சள், காய்கறி சாகுபடி செய்யும் வயல்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி, நீர் தேங்காமல் வெளியேற்றி, நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும். மழை பெய்யும்போது, விதைப்பு, அறுவடை பணிகளை தவிர்க்க வேண்டும்.
தற்போது நிலவி வரும் வானிலையால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமல், உலர் தீவனத்தை கொடுக்க வேண்டும். மழை காலமாக உள்ளதால், கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தி, நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
மாடுகளின் கொட்டகை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காதபடியும் இருக்க வேண்டும். மாடுகளில் மடி நோய் உண்டாவதை தடுக்க, பால் கறப்பதற்கு முன்பும், பின்பும், பொட்டாசியம் பர்மாங்கனேட், தண்ணீரில் கலந்து மடி மற்றும் பால் கறப்பவரின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மழைகாலங்களில் இளம் கோழிக்குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்து வளர்க்க வேண்டும். 4 முதல், 5 வாரங்களுக்கு, ஒரு கோழிக்குஞ்சுக்கு, 2 வாட் வீதம் செயற்கை வெப்பம் அளிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த பண்ணைக்குட்டைகள் அல்லது பொருத்தமான கட்டமைப்புகளை பயன்படுத்தி மழைநீரை சேமிக்கலாம்.
ஏரிக்கு நீர் வருமா?
பனமரத்துப்பட்டியில், சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான ஏரி, 2,137 ஏக்கரில் உள்ளது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரின்றி வறண்டு சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
தற்போது வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் கரையை கடக்கும்போது, சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களாகவே, பனமரத்துப்பட்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது. புயல் கரையை கடப்பதால், இன்று, நாளை தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதால், பனமரத்துப்பட்டி ஏரிக்கு நீர் வருமா என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.