/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சகோதரர்கள் சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி: ரூ.10 லட்சம் கேட்டு எஸ்.எஸ்.ஐ., மிரட்டல்?
/
சகோதரர்கள் சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி: ரூ.10 லட்சம் கேட்டு எஸ்.எஸ்.ஐ., மிரட்டல்?
சகோதரர்கள் சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி: ரூ.10 லட்சம் கேட்டு எஸ்.எஸ்.ஐ., மிரட்டல்?
சகோதரர்கள் சொத்து பிரச்னையில் பெண் தற்கொலை முயற்சி: ரூ.10 லட்சம் கேட்டு எஸ்.எஸ்.ஐ., மிரட்டல்?
ADDED : ஆக 28, 2024 08:25 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் மகன்கள் கோவிந்தராஜ், 41, சீனிவாசன், 38. இவர்கள் தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்துள்ளனர். பண்ணை மீது வங்கி கடன் பெற்றது தொடர்பாக சகோதரர்கள் இடையே பிரச்னை எழுந்தது. தொடர்ந்து சொத்தை பிரித்து தரும்படி கோவிந்தராஜ் கேட்க, அவரது பெற்றோர் மறுத்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் மீண்டும் சகோதரர்கள் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதனால், 2024, ஜன., 19ல், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் கோவிந்தராஜ் மனு அளித்தார். அதில், 'என்னையும், மனைவி சங்கீதாவையும் தாக்கிய சகோதரர், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சகோதரர்கள் இடையே சொத்து பிரச்னை ஏற்பட்டு சீனிவாசன் நேற்று புகார் அளித்தார். தம்மம்பட்டி போலீசார், கருப்பண்ணன், கோவிந்தராஜ், சீனிவாசனை அழைத்து விசாரித்தனர்.
அப்போது சங்கீதா, 'ஒரு தரப்புக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுவதால் நீதி கிடைக்காது. ஸ்டேஷனில் தற்கொலை செய்து கொள்வோம்' என கூறி ஸ்டேஷனில் இருந்து வெளியேறினர். வீட்டுக்கு சென்ற அவர், 'ஈ' மருந்து குடித்து மயங்கினார். அவரை, கோவிந்தராஜ் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இதுகுறித்து கோவிந்தராஜ் கூறியதாவது: சீனிவாசன், அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற செயலராக உள்ளார். நான், அ.தி.மு.க., விவசாய அணி துணை செயலராக உள்ளேன். சொத்து பிரச்னை குறித்து தம்மம்பட்டி ஸ்டேஷனில் விசாரித்தனர். தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, சீனிவாசனுக்கு சாதகமாக செயல்பட, போலீசாரிடம் கூறியுள்ளார். அதனால் என்னை, போலீசார் மிரட்டி வந்தனர்.
இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ., பெரியசாமி, 'எனக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதுகுறித்து எங்கு புகார் செய்தாலும் அவற்றை எப்படி சரிசெய்வது என்று எனக்கு தெரியும்' என்கிறார். நான், அ.தி.மு.க.,வில் உள்ளதால், சொத்து பிரச்னையை போலீசார் நியாய முறையில் பேசுவதில்லை. மன உளைச்சலில் மனைவி தற்கொலைக்கு முயன்றார். இவ்வாறு அவர் கூறினார்.
சீனிவாசன் கூறுகையில், ''வங்கியில் பெற்ற கடனை, அவர் ஏற்காததால் கேள்வி எழுப்பினேன். மேலும், தி.மு.க.,வில் இருப்பதால் என் மீதும், போலீஸ் மீதும் பொய் காரணங்களை கூறுகிறார்,'' என்றார். எஸ்.எஸ்.ஐ., பெரியசாமி கூறுகையில், ''3.50 லட்சம் ரூபாய் வங்கி கடனை தரும்படி அவரது பெற்றோர் கூறியதால் அதுகுறித்து கேட்டபோது விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கோவிந்தராஜ், அவரது மனைவி எழுந்து சென்றனர். நான் அவரிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டது என்பது பொய். நான் எதற்கு அவ்வளவு பணம் கேட்க வேண்டும். எங்களிடம் சின்னதுரை, இப்பிரச்னை தொடர்பாக எதுவும் கூறவில்லை,'' என்றார்.
சின்னதுரை கூறுகையில், ''சகோதரர்கள் சொத்து பிரச்னை குறித்து தெரியாது. போலீசாரிடம் யாருக்கும் சாதகமாக பேசும்படி நான் கூறவில்லை. என் மீது பொய் தகவல் கூறுகின்றனர்,'' என்றார். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்,'' என்றார்.