/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கு.க., செய்த பெண் பலி; அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்
/
கு.க., செய்த பெண் பலி; அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்
கு.க., செய்த பெண் பலி; அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்
கு.க., செய்த பெண் பலி; அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்
ADDED : நவ 20, 2024 07:35 AM
பெ.நா.பாளையம்: ஆத்துார் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் இறந்ததால், அவரது உறவினர்கள், மருத்துவர்களை கண்டித்து, பெத்தநாயக்கன்பாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பனைமடலை சேர்ந்த, லாரி டிரைவர் முருகன். அவரது மனைவி செல்லம், 35. இவர்களுக்கு, 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில், 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவமாக பிறந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய, செல்லம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டது.
அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நேற்று காலை, 7:00 மணிக்கு உயிரிழந்தார். உடல் பரிசோதனை செய்யாமல் தவறான முறையில் அறுவை சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்ததுதான், செல்லம் உயிரிழக்க காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடலில், கருமந்துறை - ஏத்தாப்பூர் நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், செல்லம் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, 50க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் கூறினார். இதனால் உறவினர்கள், 4:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மாற்று வழியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.