ADDED : அக் 10, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; மேட்டூர் நகராட்சி கூலி லைனில், 55 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. அதில், 30 வீடுகளுக்கு, நகராட்சி நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால், மின் இணைப்பு பெற முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள், பட்டா, மின் இணைப்பு கேட்டு, பலமுறை ஆர்.டி.ஓ., - தாசில்தாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அப்பகுதி பெண்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் விடுப்பில் சென்றது தெரியவந்ததால், அங்கிருந்து மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகம் சென்ற பெண்கள், சப் - கலெக்டர் அம்ருதாவிடம் மனு கொடுத்தனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், பெண்கள் கலைந்து சென்றனர்.
