/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்களின் தொழில் திறன் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும்; தேசிய பெண்கள் சமத்துவ தின கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
/
பெண்களின் தொழில் திறன் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும்; தேசிய பெண்கள் சமத்துவ தின கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
பெண்களின் தொழில் திறன் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும்; தேசிய பெண்கள் சமத்துவ தின கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
பெண்களின் தொழில் திறன் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும்; தேசிய பெண்கள் சமத்துவ தின கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
ADDED : ஆக 28, 2024 08:10 AM
சேலம்: ''பெண்களின் தொழில் திறன், குடும்பத்திலும், அதை தொடர்ந்து சமூகத்திலும் மாற்றத்தை உருவாக்கும்,'' என, கலெக்டர் பிருந்தாதேவி பேசினார்.
சேலம், ஏ.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று தேசிய பெண்கள் சமத்துவ தின சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் கார்மல் மெர்சி பிரியா வரவேற்றார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, போலீஸ் துணை கமிஷனர் கீதா, கனரா வங்கி உதவி பொது மேலாளர்கள் ஹரேந்திரகுமார், சங்கர் ராவ், காலைக்கதிர் பொது மேலாளர் ஜெரால்டு, காலைக்கதிர் ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
கருத்தரங்கில், கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது; பெண்களுக்கான சமத்துவம் குறித்த கருத்தரங்கில், ஆண்களும் அதிக அளவில் பங்கேற்பது மகிழ்ச்சி. உங்கள் வீட்டில், தாய், சகோதரியை எப்படி போற்றுகின்றீர்களோ, அதே போன்று, நம்மை சுற்றியுள்ள பெண்களையும் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதே சமத்துவம். சேலம் மாவட்டத்தில் கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி, டி.ஆர்.ஓ., உள்ளிட்ட பல உயர் பதவிகளை பெண்கள் பிடித்துள்ளோம். இந்த சமத்துவத்தை, இன்னும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பெண்கள் இளங்கலையோடு நின்று விடாமல், மேன்மேலும் படித்து உயர்நிலையை எட்ட புதுமை பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் உதவிகள் வழங்கப்படுகின்றன.
பெண்களின் தொழில் திறன், குடும்பத்திலும், அதை தொடர்ந்து சமூகத்திலும் மாற்றத்தை உருவாக்கும். ஆண்கள் செய்யக்கூடிய பணிகளை மட்டுமின்றி, அவர்களால் செய்ய முடியாத பல பணிகளையும் பெண்கள் செய்ய முடியும் என நிரூபித்து வருகின்றனர். ஆண்கள் படித்து முடித்து பணிக்கு சென்று, தங்கள் குடும்பத்தை காப்பது போல், பெண்களும், படித்து முடித்து தங்கள் குடும்பத்தை அமைத்து கொள்ளும் போது, சமத்துவத்தின் அடுத்த படிக்கல்லாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
பெண்களுக்கான சமத்துவம்
போலீஸ் துணை கமிஷனர் கீதா பேசியதாவது: பெண்கள் சமத்துவம் என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே இருந்த பாகுபாடு, தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பள்ளி, கல்லுாரி, பணிபுரியும் இடம் என அனைத்து இடங்களுக்கும் பெண்களுக்கான சமத்துவம் பரவ வேண்டும்.
கி.மு., 2ம் நுாற்றாண்டிலேயே தமிழ் பெண் புலவர்கள், அறிஞர்கள் இருந்துள்ளனர். தற்போது வழங்கப்படும் சமத்துவத்தை குறைத்துவிடாமலும், பாகுபாட்டை நீக்கவும் நாம் உறுதி ஏற்க வேண்டும். பெண்கள், தாங்கள் பெற்று வளர்க்கும் ஆண் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். அனைவரும் அதை செய்தாலே இரவு, 12:00 மணிக்கு கூட, பெண் தனியாக வெளியே செல்ல முடியும் என்ற சூழல் உருவாகும். இவ்வாறு பேசினார்.
ஆடை, அலங்காரத்தில்...
கனரா வங்கி மண்டல மேலாளர் புஷ்பலீலாவதி பேசியதாவது: நாட்டை மட்டுமல்ல, வீட்டை கட்டமைக்கவும் சமத்துவம் தேவை. ஆடை, அலங்காரத்தில் சமத்துவம் இல்லை. நாம் எப்படி வழிநடத்தி செல்கிறோம் என்பதில்தான் சமத்துவம் அடங்கியுள்ளது. சம்பாதிக்கும் திறன் வளர்த்துக்கொண்டால் மட்டுமே, ஒரு பெண் யாருக்கும் அடிமையாக இல்லாமல் வாழ முடியும். பெண்களுக்கென சிறப்பான பல திட்டங்களை கனரா வங்கி வழங்குகிறது. ஏஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்கும் பெண்களுக்கு, எவ்வித பிரீமிய தொகையும் பிடித்தம் செய்யாமல், புற்றுநோய் ஏற்பட்டால் அதற்கான முழு சிகிச்சையும் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோராக பல்வேறு கடன் திட்டங்களும் உள்ளன. இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியை, ஏ.வி.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரியுடன், கனரா வங்கி இணைந்து வழங்கியது. காலைக்கதிர் மீடியா பார்ட்னராக பங்கேற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.