ADDED : ஏப் 26, 2025 01:50 AM
ஆத்துார்:ஆத்துார், கொங்கணாபுரம், வாழப்பாடியில் நடந்த மஞ்சள் ஏலம் மூலம், 5.90 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. அதில் சுற்றுவட்டார விவசாயிகள், 2,110 குவிண்டால்(100 கிலோ ஒரு குவிண்டால்) கொண்ட, 6,186 மூட்டை மஞ்சளை கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால், விரலி ரகம், 13,569 முதல், 16,834 ரூபாய்; உருண்டை ரகம், 12,069 முதல், 14,899 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்), 25,989 முதல், 29,699 ரூபாய்க்கு விலைபோனது. 2,110 குவிண்டால் மூலம், 5.76 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தைவிட, குவிண்டாலுக்கு விரலி ரகம், 200 ரூபாய், உருண்டை ரகம், 100 ரூபாய், பனங்காலி, 1,430 ரூபாய் விலை அதிகரித்தது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் நடந்த மஞ்சள் ஏலத்துக்கு, 750 மூட்டைகள் கொண்டு வந்தனர். அதன்மூலம், 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
அதேபோல் வாழப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் மூலம் மஞ்சள் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 13.37 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரகாஷ்குமார் தெரிவித்தார்.

